பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது., குற்றவாளிகள் தப்பிக்க கூடாது.! பிரதமர் மோடி ஆவேசம்.! 

Estimated read time 1 min read

டெல்லி : பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்கமுடியாது, அத்தகைய குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி கொல்கத்தா மருத்துவமனை கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் நாடெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை அடுத்து மகாராஷ்டிராவில் எல்.கே.ஜி குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை என ஆரம்பித்து தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை என பெண் பிள்ளைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நீண்டு கொண்டே செல்கிறது.

பெண்களுக்கு, பெண் பிள்ளைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் இந்திய தண்டனைச் சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும்.

குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணை, தண்டனை உள்ளிட்டவை உடனடியாக வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோர்களுக்கு தாமதப்படுத்தப்படாமல் நீதி வழங்கப்படவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதனை பிரதிபலிக்கும் விதமாக பிரதமர் மோடி நேற்று மகாராஷ்டிராவில் நடைபெற்ற விழாவில் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார். அவர் கூறுகையில், ” இந்தியாவில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை மன்னிக்க முடியாது. இதனை குறிப்பிட்டு விசரணைகளை விரைந்து முடித்து தண்டனை வழங்க வேண்டும் என மாநில அரசுகளிடம் நான் பலமுறை கூறியுள்ளேன்.” என ஜல்கானில் நடந்த பெண்களுக்கான மகளிர் சுய உதவிக்குழு கடனுதவி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

மேலும், ” தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் நாட்டின் மகள்களின் பொருளாதார பலத்தை அதிகரிப்பதோடு, அவர்களின் பாதுகாப்பும் நாட்டின் முன்னுரிமையாகும். செங்கோட்டையில் இருந்து இதனை நான் பலமுறை வலியுறுத்தியுள்ளேன்.

நாட்டின் எந்த மாநிலமாக இருந்தாலும், எனது சகோதரிகள் மற்றும் மகள்களின் வலியையும், அவர்களின் கோபத்தையும் நான் புரிந்துகொள்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மன்னிக்க முடியாத பாவம். இதனை நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், ஒவ்வொரு மாநில அரசுக்கும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துவேன்.

குற்றவாளிகளுக்கு எந்த வகையிலும் நாட்டின் குடிமக்கள் யாரும் உதவி செய்யக் கூடாது. மருத்துவமனை, பள்ளி, அரசுத்துறை நிறுவனங்கள் அல்லது காவல்துறை அமைப்பு எதுவாக இருந்தாலும், எந்த மட்டத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றத்தில் அலட்சியம் காட்டக்கூடாது.

இந்தக் குற்றம் என்றுமே மன்னிக்க முடியாதது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்காக நமது அரசு தொடர்ந்து சட்டங்களை கடுமையாக்கி வருகிறது. இன்று, நாட்டின் பெண்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் உள்ளனர்.

முன்பு எப்.ஐ.ஆர் பதிவு தாமதம், வழக்கு விசாரணை தாமதம் என்று புகார்கள் வந்தன. ஆனால் தற்போது புதிய சட்டதிருத்தங்களில் இதுபோன்ற பல தடைகளை நீக்கியுள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து அதில் ஒரு முழு அத்தியாயமே (தனிப்பிரிவு) உருவாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றால், அவர்கள் வீட்டிலிருந்தே இ-எஃப்ஐஆர் பதிவு செய்யலாம்” என்று பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் அதற்கு மத்திய அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி பேசினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author