Web team
நூலின் பெயர் : நையப்புடை
நூல் ஆசிரியர் : கவிஞர் பவகணேஷ்
மதிப்புரையாளர் : கவிஞர் இரா.இரவி
நூல் ஆசிரியர் கவிஞர் பவகணேஷ் இந்நூலை மறக்காமல் தன் பள்ளித் தமிழாசிரியர் திரு.சரவணன் அவர்களுக்கு காணிக்கையாக்கி உள்ளார். இலக்கியப் பயணத்திற்கு துணை நின்றவர்களையும் மறக்காமல் குறிப்பிட்டு நன்றி பாராட்டி உள்ளார். கவிஞர்கள் மயிலாடுதுறை இளையபாரதி,கன்னிக் கோயில் இராஜா,வசீகரன் ஆகியோரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றது. நூலின் அட்டைப்படமே கருப்பு வெள்ளையில் வித்தியாசமாக உள்ளது.
குழந்தைகள் இன்று,”வீடியோ கேம்ஸ்” காரணமாக வன்முறையாளர்களாக மாறி வருகிறார்கள் என்பதை கவிதையில் பதிவு செய்துள்ளார்.
ஆழகு பூக்கும் தலைமுறை
துப்பாக்கிச் சூடு அய்ந்து புள்ளி கத்திக்குத்து பத்துப்புள்ளி
வெறும் வன்முறை கொண்டு வடிவமைத்து பொத்தான் அழுத்தி
எண்ணிக்கை அடங்கா “வீடியோ கேம்ஸ்”-ஸின் ஆக்கிரமிப்பு
இன்றைய குழந்தைகள் உலகம்.
பிஞ்சு நெஞ்சங்களில் வன்முறை நஞ்சு பதிக்கும் முறைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற வழிப்புணர்வை விதைக்கின்றனர். சமுதாயத்தின் மீதான அக்கறை தான் இந்தக் கவிதை நூல். இன்றைய கல்வியின் நிலையை மிக நுட்பமாக புதுக்கவிதையில் பதிவு செய்துள்ளார்.
திறக்கும் வான்வெளி
சுயஅறிவு மழுங்கடிக்கும் மனப்பாட மதிப்பெண்கள்
புத்தகப் பக்கங்களை ஊடே
எங்களை மடித்து வைத்து
எழுத்துக்களுடன் இடைவெளி சேர்த்து
அச்சு பிசகாமல் மனனம் செய்து
யோசிக்கும் சுயதிறன் இல்லாமல் செய்தது இக்கல்வி
தமிழ் கல்லாமல் ஆங்கிலம் ? திகட்டும் பால்
தமிழ் படிக்காமலே பட்டம் பெறும் அவல நிலை தமிழகத்தைத் தவிர வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இந்நிலை மாற வேண்டும்.
சுற்றுச்சூழல் மாசு விழிப்புணர்வு என்பது காலத்தின் கட்டாயம். அதையும் கவிஞர் புதுக்கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.
புகையில்லா பூமி சமை
புகைபுகை – திசைதோறும் புகை-வாகனப்புகை – ஆலைப்புகை
சிகரெட்புகை – அணுகுண்டுபுகை – பூமிச்சூட்டுப் புகை
புகை வாழ்வு எரிப்பது உணர்
புகையைக் குறைத்து பூமி செழிக்க அவைகளும் ஒத்துழைக்க வேண்டிய அவசியத்;தை உணர்த்துகின்றார் நூலாசிரியர் கவிஞர் பவகணேஷ்
மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் மக்களவையில் மக்களுக்கு பயன்படும் பொருள் பற்றி பேசாமல் கூச்சல்,குழப்பம்,சண்டை செய்து,சபை ஒத்தி வைப்பு செய்யும் அவலத்திற்கு
கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அரசியல்வாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் வாழ்வு எப்போது அர்த்தப்படும் என்பதைப் பதிவு செய்துள்ளார்.,
எதிர்காலம் மீட்கும் அட்சயம் பாத்திரம்
ஒரு சேதி நமக்கு – அநாவசிய செலவுகள் நீக்கு
ஆதரவு குடை விரி – நம்பிக்கை பேசு
சேவைக்குக் கை கொடு – அர்த்தப்படும் வாழ்வு