அறியாமை நீக்கி, அறிவை வளர்க்கும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு ஒளியை உலகுக்குத் தந்த வள்ளலார்,வள்ளல் பெருமான் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளாரின் பிறந்த நாள் இன்று. தனிப் பெருங் கருணை நாளாக கடைப்பிடிக்கப்படும் இந்த நல்ல நாளில் பசிப்பிணி நீக்கும் மருத்துவராக வாழ்ந்த வள்ளலார் குறித்த ஒரு செய்தி தொகுப்பு.
தமிழகம் செய்த பெரும் தவப்பயனால், சிதம்பரம் அருகே உள்ள மருதூரில், இராமையாபிள்ளைக்கும் சின்னம்மையாருக்கும் திருமகனாக 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் தேதி இராமலிங்கர் தோன்றினார்.
வாழையடி வாழையாக வந்த சைவ நெறியில் உதித்த இராமலிங்கருக்கு இளம் வயதிலேயே தமிழ்க் கடவுளாகிய முருகப் பெருமானின் திருக்காட்சி கிடைத்தது. கருவிலே திருவுடையவராக ,கவி எழுதும் பேராற்றலைப் பெற்றிருந்தார் இராமலிங்கர்.
காஞ்சிபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியாரிடமும், தம் சகோதரர் சபாபதிப் பிள்ளையிடமும்,செந்தமிழும் வடமொழியும் ஆகிய இருபெரும் மொழிகளையும் முறையாக இராமலிங்கர் கற்றுணர்ந்தார்.
எல்லோரும் ஒற்றுமையாக உலகில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் வள்ளலார் அருளிய திருப்பாடல்களின் தொகுதியே திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது.
இந்தப் பாடல்கள் ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. திருவருட்பா,மொத்தம் 399 பதிகங்களையும் 5,818 பாடல்களையும் கொண்டதாகும். திருவருட்பாவில்,1596 வரிகள் கொண்ட அருட்பெருஞ்சோதி அகவலை ஒரே இரவில் பாடி முடித்தார் என்பது அவரது அருள் மாட்சிமைக்கு உதாரணம்.
திருவருட்பாவின் எல்லாப் பாடல்களும் இறைவனை முன்னிறுத்தியே பாடப்பெற்றவை ஆகும். இது, பக்தி இலக்கியத்தில் ஒரு புதுமை, மற்றும் தமிழுக்குக் கிடைத்த பெருமை ஆகும்.
திருவருட்பா, அவரது தலைமைச் சீடர் தொழுவூர் வேலாயுதனாரால் நான்கு திருமுறைகளாக வெளியிடப்பட்டன.பின்னர் ஐந்தாம், ஆறாம் திருமுறைகள் வெளியிடப்பட்டன.
தமிழக முன்னாள் அறநிலையத்துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன், இராமலிங்கரின் உரைநடை, கடிதங்கள் முதலியவற்றை தனி நூலாகத் தொகுத்து வெளியிட்டார். பிற்காலத்தில், ஊரன் அடிகளும் காலமுறைப்படி இவற்றைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.
இவை தவிர, வள்ளல்பெருமான் மனுமுறைகண்ட வாசகம், மற்றும் ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய இரண்டு உரைநடை நூல்களையும் எழுதியிருக்கிறார். வள்ளலார் வாழ்ந்த காலத்திலேயே, வள்ளலார் எழுதிய திருவருட்பாவுக்கு எதிராக பல கண்டன நூல்கள் வெளிவந்துள்ளன என்பதும் குறிப்பிடத் தக்கது.
வள்ளல் பெருமான், ஒரு அருளாசிரியராக, நூலாசிரியராக,இதழாசிரியராக, உரையாசிரியராக,பதிப்பாசிரியராக,ஞானாசிரியராக, மொழியாராய்ச்சியாளராக, சித்தமருத்துவராக,சொற்பொழிவாளராக,திகழ்ந்தார்.
வடலூரில், சத்திய ஞான தர்ம சபை, சர்வ சமய சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் மூன்று அமைப்புகளை வள்ளல் பெருமான் ஏற்படுத்தினார். வள்ளல் பெருமான், இதன்மூலம், தனக்கென ஒரு தனிக்கொள்கையை, தனிக்கொடியை, தனிச்சபையை, தனிமார்க்கத்தை, தனி மந்திரத்தை, தனி வழிபாட்டை ஏற்படுத்தினார்.
வள்ளலார், இளமையில் முருகப்பெருமாமானை வழிபடும் தெய்வமாகவும், திருஞான சம்பந்தரைத் தம் ஞானகுருவாகவும், திருவாசகத்தைத் தம் வழிபடும் நூலாகவும் போற்றி வந்தார்.
தம் இறுதி காலத்தில், பரம்பொருளே, அனைத்து உயிர்களிடத்தும், சோதி வடிவில் திகழ்கின்றது என்றும், அந்த அருட்பெருஞ்சோதியின் தனிப்பெருங் கருணையே உயிர்களையெல்லாம் வாழ வைக்கிறது என்றும் தெள்ள தெளிவாக குறிப்பிட்டார்.
வள்ளல் பெருமான், 1874 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி ,ஒரு தைப்பூச நன்னாளில் வடலூரில் உள்ள சித்தி வளாகத்தில் ஓர் அறைக்குள் சென்று கதவினை உட்புறமாக தாழிட்ட நிலையில், அருட்பெருஞ்சோதியில் இரண்டறக் கலந்தார்.
இராமலிங்க அடிகளாரின் பெருமையை போற்றும் வகையில், 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17 ஆம் தேதி சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு, இந்திய அரசு வள்ளல் பெருமானைச் சிறப்பித்தது.
இன்றும் உலகில் நல்லிணக்கம் பெருக ,வள்ளல் பெருமானின் சிந்தனைகள் வழிகாட்டுகின்றன. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று உயிர்களுக்காக உள்ளம் உருகிய வள்ளல் பெருமானின் ஆன்மநேய கோட்பாட்டை உணர்ந்து, வாழ்வில் நலம் பெறுவோம்.