கல்லெழுத்து

Estimated read time 1 min read

Web team

IMG-20241016-WA0042.jpg

கல்லெழுத்து !
நூல் ஆசிரியர் : புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வசந்தா பதிப்பகம், 2/166, ஆர்.கே. இல்லம், முதல் தெரு, புதிய வசந்த நகர், ஓசூர்-635 107. கிருட்டிணகிரி மாவட்டம், தொலைபேசி : 04344-245350 விலை:ரூ.100

*****
கல்லெழுத்து என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது. பழங்காலத்தில் தமிழர்கள் கல்வெட்டில் எழுத்துக்களை பொறித்து வைத்ததன் காரணமாகவே தமிழர்கள் வரலாற்றை, பெருமையை அறிய முடிந்தது. அதுபோல தமிழ், தமிழர், தமிழ்நாடு பற்றியும் முக்கியமான கவிஞர்கள், தலைவர்கள் பற்றியும், மரபு மாறாமல் மரபுக் கவிதை வடித்துள்ள நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

இவருடைய மரபுக் கவிதை வராத இதழே இல்லை என்று சொல்லுமளவிற்கு எல்லா இதழ்களிலும் எழுதி வரும் படைப்பாளி.

‘உன் முகமாய் இரு’ நூலின் வெற்றியினைத் தொடர்ந்து வந்துள்ள இந்நூலிற்கு தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களின் அணிந்துரை, நூல் எனும் மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக மிளிர்கின்றது.

நூலாசிரியர் கவிஞர் புலவர் கருமலைத் தமிழாழன் என்பதை விட ‘தமிழ்மலைத் தமிழாழன்’ என்பது பொருத்தமாக இருக்கும். தமிழ்மழைத் தமிழாழன் என்பதும் பொருத்தமாக இருக்கும். நூல் முழுவதும் தமிழ்மழை பொழிந்து மரபுக் கவிதை விருந்து வைத்துள்ளார். அட்டை முதல் அட்டை வரை உள்ள அனைத்துக் கவிதைகளும் சிறப்பாக இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ :
தடை தகர்த்து வாழும் தமிழ்!

அன்னியரின் அடிமையாலே ஆங்கிலந்தான்
அறிவியலைத் தருமென்றும் வேலை வாய்ப்பைப்
பன்னாட்டில் கொடுக்குமென்றும் மாயை தோற்றிப்
பசுந்தமிழைச் சிறாரிடத்தில் மறைத்த போதும்
எந்நாடும் போற்றிடவே கணினிக்குள்ளும்
ஏற்றமுடன் பல்துறையின் வளங்கள் பெற்றே
தமிழ்மொழியும் தடை தகர்த்தே வாழும் என்றும்!

இரண்டு பேர் சந்தித்து ஆங்கிலத்தில் பேசிக்கொண்டால் அவர்கள் தமிழர்கள் என்று நகைச்சுவையாக சொல்லுமளவிற்கு, தமிழன் தமிழில் பேச வெட்கப்படுகிறான். அந்நிய மொழியான ஆங்கிலத்தில் பேசினால் பெருமை என்று போலியாக நம்புகிறான். அதனை உணர்த்திடும் கவிதை நன்று.

உண்மைத் தமிழனாய் உயர்வானோ!

தமிழா நீ தமிழ்மொழியை மதிக்கவில்லை
தமிழினிலே பேசுதற்கும் விரும்பவில்லை
தமிழா நீ கழக நூலை மதிக்கவில்லை
தமிழ்வழியில் கற்பதற்கும் விரும்பவில்லை
தமிழா நீ தமிழிசையை மதிக்கவில்லை
தமிழ்க்கலைகள் பேணுதற்கும் விரும்ப வில்லை.
தமிழா நீ பண்பாட்டை மதிக்கவில்லை
தமிழ்மரபு நெறிகளையும் விரும்பவில்லை!

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் கவிதைகள் படித்தால் தமிழ்ப்பற்று பிறக்கும். தமிழினப்பற்று பிறக்கும். தமிழ்நாட்டுப்பற்று பிறக்கும். உணர்ச்சிமிகு கவிதைகளின் பெட்டகம் புரட்சிக்கவிஞரைப் பற்றி எழுதிய கவிதை மிக நன்று.அவர் எழுதிய நூல்களின் பெயர்களைக் கொண்டே வடித்த கவிதை நன்று .

பாரதிதாசனின் பெண்மை!

இசையமுதாய்ப் பெண்களினை மீட்டும் போதே
இருண்டவீடும் குடும்பத்து விளக்காய் மாறும்
நசையோடே எதிர்பாரா முத்தம் தன்னில்
நங்கையினைத் தொடும்போதே அழகு சிரிக்கும்
விசையோடே தமிழச்சி கத்தி வீசி
விதிமூடம் சாய்த்தபோதே பெண்மை ஓங்கும்
கசையடியாய் இவர்தந்த பாட்டே பெண்ணைக்
காலாலே மிதிப்போரை வீழ்த்தும் வேட்டு!

நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது, வல்லவனாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் இலக்கிய இமயம் மு.வ. அவர்கள். இந்த நூலிற்கு அணிந்துரை வழங்கி உள்ள மு.வ. அவர்களின் செல்லப்பிள்ளை தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் போன்ற பல வல்லவர்களையும் உருவாக்கிய குரு மு.வ. அவர்கள். அவர் பற்றிய கவிதை நன்று.

முயற்சியின் வழிகாட்டி மு.வ. !
திருக்குறளுக் கிவர்தந்த உரையின் நூல்தாம்
திருநாட்டில் வரலாற்றைப் படைக்கு தின்றும்
அருமையென இவர்படைத்த நூல்கள் தம்மை
அறிஞரெல்லாம் உயர்வென்றே போற்று கின்றார்
பெருமைமிகு அகல்விளக்கால் இலக்கி யத்தின்
பெருவிருதை தில்லிவரால் வெளிச்சம் பெற்றோர்
தெள்ளுதமிழ் அறிஞராகத் திகழு கின்றார்!

அன்று, அரசியலில் நேர்மை, நாணயம் இருந்தது. சொந்த சொத்துக்களை நாட்டிற்காக தந்தவர்கள் வாழந்தார்கள். ஆனால் இன்று அரசியலில் நேர்மை, நாணயம் குறைந்து ,வெகு விரைவாக சொத்து சேர்க்கும் கருவியாக அரசியல் மாறி வரும் அவலத்தை சுட்டும் கவிதை நன்று!

பொசுங்கட்டும் பொய்மை!

வேட்டை நாய் வீட்டவரைக் கடித்தல் போன்றும்
வேலிகளே பயிர்களினை மேய்தல் போன்றும்
நாட்டினையே ஆள்வதற்கு நாவில் தேனாய்
நன்மைகளைச் செய்வதாக வாக்கைப் பெற்றுக்
கூட்டாகப் பசுத்தோலைப் போர்த்திக் கொண்டு
கூறு போட்டுக் கொள்ளையிடும் பொய்மை வேட
ஆட்சியாளர் முகத்திரையை மக்களெல்லாம்
ஆர்த்தெழுந்தே சினத்தீயாய் பொசுங்கச் செய்வோம்.

சிலர் பணம், பணம் என்று அலைகின்றனர். குடும்பத்தினருடன் அமர்ந்து பேச நேர்மின்றி, சம்பாதிக்க வேண்டும் என்ற அவசரத்தில் இயந்திரமாக பலர் மாறி வருகின்றனர். பண ஆசை, மனிதனின் நல்ல குணத்தையே மாற்றி வருகின்றது. பணம் பற்றிய கவிதை வாசகர்களை சிந்திக்க வைக்கும் என்பது உண்மை!.

பணத்தாலே முடியாது!

பணத்தாளின் கட்டுகளோ கரமி ருந்தால்
பரிவட்டம் கட்டியிறை அருக ழைப்பர்
குணமில்லை என்றாலும் பணமி ருந்தால்
குணக்குன்றே எனப்புகழ்ந்து காலில் வீழ்வார்
மனமில்லை என்றாலும் காகி தத்து
மதிப்பாலே தலையினிலே சூடிக் கொள்வார்
பிணமெனினும் அலங்கரித்த தேரி லேற்றிப்
பின்னாலே அணிவகுத்தே அனுப்பி வைப்பார்.

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். அது போல பணமிருந்தால் பிணமான பின்னும் அணிவகுப்பர் என்று மக்களின் மனநிலையை படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

முற்போக்குக் கவிஞரான நூலாசிரியர் அவர்கள் பெண்கள் தினம் பற்றியும் பாடி உள்ளார்.

மகளிர் தினம் !
உயர்கல்வி பெண்களெல்லாம் பெறுவ தற்கே
உறுதியினை ஏற்பதற்கே மகளிர் நாளாம்
முயற்சி செய்து முன்னேறும் பெண்க ளுக்கு
முன் நின்று உதவுவதற்கே மகளிர் நாளாம்.

மரபுக் கவிதையின் சிறப்பு ஓசை நயம். ஓசை நயத்துடன் பல கவிதைகள் உள்ளன. நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள் மரபு மாறாமல் மரபில் நின்று கவி வடிப்பதற்கு பாராட்டுக்கள்.
மரபுக்கவிதை ரசிகர்கள் அவசியம் படிக்க வேண்டிய அற்புத நூல் .

.

Please follow and like us:

You May Also Like

More From Author