வருங்கால வைப்பு நிதி (EPF) உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள பணத்தை ஏப்ரல் 1-ந்தேதி முதல் யுபிஐ (UPI) மூலம் நேரடியாக வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளும் புதிய வசதி அறிமுகமாக உள்ளது.
தற்போது ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ள நிலையில், இந்த புதிய முறை உறுப்பினர்களின் வேலையை எளிதாக்கும். சுமார் 8 கோடி பயனாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என்றும், பாதுகாப்புக்காக யுபிஐ பின் (UPI PIN) பயன்படுத்தும் வசதி இதில் இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5 கோடிக்கும் அதிகமான பணப் பரிமாற்றக் கோரிக்கைகளைச் சமாளிப்பது பி.எஃப் அலுவலகத்திற்கு நிர்வாக ரீதியாகப் பெரும் சுமையாக உள்ளது. இதனைத் தவிர்க்கவும், வங்கிகளுக்கு இணையான வேகமான சேவையை வழங்கவும் மென்பொருள் கட்டமைப்பை அரசு மேம்படுத்தி வருகிறது.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, பி.எஃப் உறுப்பினர்கள் தங்களுக்குத் தேவையான பணத்தை உடனடியாகத் தங்கள் வங்கி கணக்கிற்கு மாற்றி, டிஜிட்டல் மூலமாகவோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ எடுத்துக்கொள்ள முடியும்.
