தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பொதுமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ரூ. 3,000 ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி 8-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 2.22 கோடி அரிசி அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் சுமார் 2.23 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர். ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்புடன் சேர்த்து வழங்கப்படும் இந்த ரூ. 3,000 ரொக்கப் பணத்தைப் பெறுவதற்காக, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏற்கனவே டோக்கன்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், விடுமுறை தொடங்குவதற்கு முன்னதாகவே அனைத்துப் பயனாளிகளுக்கும் பரிசுத் தொகுப்பைச் சென்றடையச் செய்ய உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
