வழிக்கு வந்தது சீனா : இந்தியாவிடம் சரண்டரானது எப்படி? சிறப்பு கட்டுரை!

Estimated read time 1 min read

ரஷ்யாவில் நடைபெறும் 16 வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் மோடி கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னதாக, ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. சீன எல்லையில் இந்திய வீரர்கள் மீண்டும் ரோந்து செல்வதற்கு, சீனாவுடன் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார். அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

இந்திய-சீனா எல்லை பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே 3,488 கிலோமீட்டர் தொலைவுக்குப் பொதுவான எல்லை உள்ளது. இதனால், கிழக்கு லடாக்கில், வரையறுக்கப் படாத நிலையில், எல்லை கட்டுப்பாடு கோடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எல்லைப் பகுதியில், இரு நாட்டு ராணுவமும் அவரவர் எல்லையில் ரோந்து செல்வதுண்டு.

2020ம் ஆண்டில், கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், வரையறுக்கப்படாத எல்லை பகுதியில், இந்திய ராணுவ ரோந்து படையினர் மீது, சீன ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது.

இந்த மோதலில், 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்ட சீன வீரர்களும் இறந்தனர் இதனையடுத்து, இரு தரப்பிலும் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன.இதனால், 45 ஆண்டுகள் இல்லாத வகையில் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.

2020ம் ஆண்டுக்கு பிறகு, இந்தோனேஷியாவில் நடந்த ஜி-20 மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை, பிரதமர் மோடி சந்தித்த போதிலும், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை.

ஆனால், தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின் போது, பிரதமர் மோடி மற்றும் ஜி ஜின்பிங் இடையே பரஸ்பர உறவை மேம்படுத்தவதற்கான செயல்திட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.

தொடர்ந்து, இராணுவ ரீதியாகவும், வெளியுறவுத் துறை அமைச்சக அளவிலும் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், மொத்தம்,ஏழு ரோந்து இடங்கள் தொடர்பாக பிரச்னை இருந்தது. பல கட்ட பேச்சுக்குப் பின், ஐந்து இடங்களில் சமரசம் ஏற்பட்டு படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. மேலும் டெப்சாங்க், டெம்சோக் ஆகிய இடங்கள் தொடர்பான பிரச்னை நீடித்து வந்தன.

இப்போது அதிலும் சுமூகமான ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தம் தொடர்பான விரிவான தகவல்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், இருநாட்டு உறவுகளில் நல்ல முன்னேற்றம் வருவதற்கான தொடக்கமாக இந்த ஒப்பந்தம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். முன்னதாக, சீனாவுடனான இறுக்கமான உறவுகளில் பல அதிரடி முடிவுகளை இந்திய அரசு எடுத்திருக்கிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவை இல்லை. நிறுத்திவைக்கப்பட்ட நேரடி பயணிகள் விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இந்தியாவிடம் சீன அரசு பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறது.

மேலும், சீனர்களுக்கான விசா விண்ணப்பங்கள் மீது கடுமையான விதிகளை அறிமுகப்படுத்தியது. இதன் விளைவாக, இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளில் சீனர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது.

இதுமட்டும் இல்லாமல், சீன நிறுவனங்களின் கையகப்படுத்துதல் மற்றும் முதலீடுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக, கூடுதல் அடுக்கு சோதனை மற்றும் பாதுகாப்பு அனுமதி விதிகளை இந்தியா கொண்டு வந்தது. இதனால், கடந்த 4 ஆண்டுககளில் முன்மொழியப்பட்ட சீன முதலீட்டில், பல கோடி ரூபாய்க்கான முதலீடுகள் அரசு ஒப்புதல் கிடைக்காமல் சிக்கிக் கொண்டன.

கூடுதலாக, டிக் டாக் உட்பட சுமார் 300 சீன மொபைல் ஆப்களை இந்தியா தடைசெய்தது. மேலும், சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான விவோ மீது , விசா விதிகளை மீறியதாகவும்,13 பில்லியன் அமெரிக்க டாலர் பணத்தை மோசடி செய்ததாகவும் குற்றஞ்சாட்டப் பட்டது.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக பணம் அனுப்பிய குற்றச்சாட்டில், 600 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான Xiaomi யின் சொத்துக்களை இந்தியா முடக்கியது. இந்த பின்னணியில் தான், இந்தியா-சீனா இடையேயான பேச்சு வார்த்தைகள் நிறைவடைந்து, இரு தரப்பினரும் பரஸ்பர உடன்படிக்கைக்கு வந்துள்ளனர்.

இந்த ஒப்பந்தத்தின் படி, 2020-ஆம் ஆண்டு, சீன எல்லையில் இந்திய வீரர்கள் எல்லையில் எதுவரை சென்றனரோ, மீண்டும் அதுவரை சென்று ரோந்துப் பணியில் ஈடுபட முடியும் என்று,இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில், இந்தியாவுக்கு இது ஒரு பெரிய வெற்றியாக பார்க்கப் படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author