கோவையில் தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தொடர்பான வருமான வரி சோதனையில் ரூ.42 கோடி சிக்கியுள்ளது.
கோவையில் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலதிபர்கள் தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். குறிப்பாக கோவை மாவட்டம் சிவானந்தா காலனியில் செயல்பட்டு வரும் ஆதித்யா அஸ்வின் பேப்பர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், சிங்காநல்லூர் சென்ட்ரல் ஸ்டுடியோ சாலையில் வசித்து வரும் தொழிலதிபர் பொன்னுதுரை என்பவரது வீடு, அவரது நிறுவனமான BULL கம்பெனி தொடர்பான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் கோவை மாவட்டம் உப்பிலிபாளையம் ராமானுஜம் நகரில் வசித்து வரும் புள்ளி அதிபர் வரதராசன் என்பவரது வீட்டிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை என்பது லஷ்மி டூல்ஸ், நவ இந்தியா உள்ளிட்ட இடங்களிலும் நடத்தப்பட்டது.
நான்கு நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 42 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கிடைக்கப்பெற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்த போது கணக்கில் வராத வருமானம் 100 கோடி ரூபாயை தாண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து கணக்கிடும் பணி என்பது நடைபெற்று வருவதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொழிலதிபர்கள் மற்றும் தொழில் நிறுவன நிர்வாகிகளுக்கு சம்மன் அனுப்பி வருமானவரித்துறை அடுத்த கட்டமாக விசாரணை மேற்கொள்ள உள்ளது.
இந்த வருமானவரித்துறை சோதனை நடந்து கொண்டிருக்கும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி நெருங்கிய நண்பர் சேலம் இளங்கோவன் தொடர்பான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது அந்த சோதனையின் தொடர்ச்சியாக பிஎஸ்கே குழுமம் தொடர்பான இடங்களில் நான்கு நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் பறிமுதல் செய்த ஆவணங்களையும், பணங்கள் குறித்தும் கணக்கிடும் பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.