பிரதமர் மோடி புதுடெல்லியில் உள்ள தனது இல்லத்தில் குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் கலைஞர்கள், என்.சி.சி. கேடட்கள், என்.எஸ்.எஸ். தொண்டர்களை சந்திக்கிறார்.
வரும் 26-ம் தேதி நாட்டின் 75-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குடியரசு தின நிகழ்ச்சி பெண்களை மையமாக வைத்து “விக்சித் பாரத்” என்கிற முழக்கமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், புதுடெல்லியில் உள்ள கர்தவ்யா பாதையில் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் ஊர்திகளின் கலைஞர்கள், என்.சி.சி. கேடட்கள், என்.எஸ்.எஸ். தொண்டர்களை பிரதமர் மோடி இன்று சந்திக்கிறார்.
மேலும், 25 நாடுகளைச் சேர்ந்த யூத் எக்ஸ்சேஞ்ச் திட்ட கேடட்கள் மற்றும் குடியரசு தின விழாக்களில் பங்கேற்கும் பழங்குடியின விருந்தினர்களையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.
இந்த குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலத்தில் மொத்தம் 26 ஊர்திகள் பங்கேற்கும். அருணாச்சல பிரதேசம், ஹரியானா, மணிப்பூர், மத்தியப் பிரதேசம், ஒடிஸா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஆந்திரா, லடாக், தமிழகம், குஜராத், மேகாலயா, ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 16 ஊர்திகளும், அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அமைப்புகளில் இருந்து 10 ஊர்திகளும் கர்தவ்ய பாதையில் அணிவகுத்துச் செல்லும்.