”ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் தொடரும்” : நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்!

Estimated read time 0 min read

ஜிஎஸ்டி சீரமைப்பால் அனைத்துப் பொருட்களின் விலையும் கட்டுக்குள் வரும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பால் இந்திய வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்கப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாகப் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருப்பது இருநாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சூழலில், 56வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் கடந்த 2 தினங்களுக்கு முன் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரியில் புதிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டது.

அதன்படி 4 அடுக்குகளுக்குப் பதிலாக 5%, 18% என இரண்டடுக்கு வரி விதிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி சீர்திருத்தம், அமெரிக்க வரி விதிப்பு எனப் பல்வேறு விவகாரம் தொடர்பாக டெல்லியில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

அப்போது, ஜிஎஸ்டி சீரமைப்பின்போது நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தம்மிடம் வலியுறுத்தியதாக அவர் கூறினார். ஜிஎஸ்டி வரிகளை சீரமைப்பது குறித்து பிரதமர் மோடி தன்னிடம் 8 மாதங்களுக்கு முன்பே பேசியதாகவும் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

நடுத்தர குடும்பங்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜிஎஸ்டி சீரமைப்புகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெளிவுபடுத்தினார்.

ஆன்லைன் சூதாட்டம் நாட்டையும், இளைஞர்களையும் அழித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த முடிவு அவசியமானது என்றும் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் நிதிநிலை நன்றாக இருப்பதாகவே தெளிவுபடுத்திய நிர்மலா சீதாராமன், சில அரசியல் கட்சிகள் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்துவிட்டு, நிதி தரவில்லை எனப் பின்னர் மத்திய அரசு குறைக் கூறுவதாகவும் சாடினார்.

மக்கள் பிரச்னைகளை விவாதிக்கவே நாடாளுமன்றம் எனச் சுட்டிக்காட்டிய நிர்மலா சீதாராமன், ஆனால் துரிதிருஷ்டவசமாக அவ்வாறு நடப்பதில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தார்.

ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்தின் நோக்கம், அனைத்துப் பொருட்களையும் உள்நாட்டில் உற்பத்தி செய்வது மட்டுமல்ல என்றும், நிச்சயமற்ற உலகளாவிய வர்த்தகக் கொள்கைக்கு மத்தியில் சுய மரியாதையைப் பெறுவதும் ஆத்ம நிர்பர் பாரத்தின் நோக்கம் என்றும் தெளிவுபடுத்தினார்.

தேச நலனுக்காக ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கும் என்று கூறிய நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோலை கொண்டு வரும் எண்ணம் தற்போதில்லை என்றும் தெளிவுபடுத்தினார். யாரிடம் எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை இந்தியா தான் முடிவு செய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author