இந்தியாவின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, உலகத் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். மேலும், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் உள்ள இந்திய தூதரகம், இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இந்தியாவின் 75-வது குடியரசு தின விழா, நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றிவைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த சூழலில், இந்திய குடியரசு தின விழாவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல், “இந்திய குடியரசு தின விழாவுக்கு வாழ்த்துகள். அமெரிக்காவின் முக்கிய மூலோபாய பங்காளியாக இந்தியா விளங்குகிறது. பல முக்கியத் துறைகளில் இந்தியாவுடன் ஒத்துழைக்க அமெரிக்கா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது” என்றார்.
அதேபோல, இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், இந்தியாவின் 75-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்த எக்ஸ் பதிவில், “நாடு செழிப்பு, நல்வாழ்வு மற்றும் மிகவும் பிரகாசமான அமிர்த காலமாக இருக்கட்டும். பாரதம் வாழ்க, ருசி-பாரதிய தோஸ்தி வாழ்க” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், சௌதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. தவிர, உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் உள்ள இந்திய தூதரகம், இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்த புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறது.
இந்தக் கண்காட்சி நேற்று தாஷ்கண்டில் உள்ள அலிஷர் நவோய் தேசிய நூலகத்தில் நடைபெற்றது. இக்கண்காட்சியின்போது, உஸ்பெகிஸ்தானுக்கான இந்திய தூதர் மணீஷ் பிரபாத், உஸ்பெக் மொழியில் உள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் நகலை வழங்கினார்.