நெல்லை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று திருநெல்வேலிக்கு செல்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவர், ரூ.9,368 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைப்பதுடன், டாடா சோலார் தொழிற்சாலையையும் திறந்துவைக்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், பின்னர் கார் மூலம் காலை திருநெல்வேலிக்கு செல்கிறார். அங்கு அவருக்கு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் முன்னிலையில் 5 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்துகிறார்.
பின்னர், அரசு மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொள்ளும் மு.க.ஸ்டாலின், நெல்லை மாவட்டத்திற்கு ரூ.9,368 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 75 ஆயிரத்து 151 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்ற இருக்கிறார்.
இதையடுத்து மாலை 6 மணி அளவில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் நேருஜி கலையரங்கில் ஆலோசனை நடத்துகிறார். முன்னதாக தனது நெல்லை பயணம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர், “2026 வெற்றிக்கு அச்சாரமாக விழுப்புரம் மக்கள் அளித்த வரவேற்பின் எழுச்சியோடு, பிப்ரவரி 6,7 தேதிகளில் நெல்லைச் சீமைக்கு வருகிறேன். உடன்பிறப்புகளின் உற்சாக முகங்களை உங்களில் ஒருவனான நான் கண்டு மகிழ்வேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.