நாடு முழுவதும் ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாய் பாஸ் பெற்று சுங்கச்சாவடிகளை எளிதில் கடந்து செல்வதற்கான திட்டத்தை அமல்படுத்த போவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை அமல்படுத்தப்பட்ட போதிலும், வாகன நெரிசல் கட்டுக்குள் வராததால், புதிய முறையை நடைமுறைப்படுத்த மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
அந்த வகையில், ஆண்டுக்கு 3 ஆயிரம் செலுத்தி பாஸ் பெற்றால், நாடு முழுவதும் எந்தவொரு சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் கடக்கும் முறை அமல்படுத்தப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இதேபோல 15 ஆண்டுகள் கால அளவுடன் கூடிய 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நீண்டகால பாஸ் திட்டத்தையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சுங்கச்சாவடிகளில் மாதம் 340 ரூபாய்க்கும், ஆண்டுக்கு 4,080 ரூபாய்க்கும் பாஸ் திட்டம் நடைமுறையில் உள்ள போதிலும், இதன்மூலம் நாடு முழுவதும் பயணிக்க இயலாது.
இதைத் திருத்தி, நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசலின்றி பயணிக்கும் வகையில் மத்திய அரசு திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.