விசாரணைக்கு நேரம் மற்றும் இடத்தைத் தேர்வு செய்யுமாறு கூறி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை தரப்பில் மீண்டும் புதிய சம்மன் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது ராஞ்சியில் 7.16 ஏக்கர் நில மோசடி தொடர்பாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இவ்வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், ஹேமந்த் சோரன் ஆஜராகவில்லை. எனவே, தொடர்ந்து 7 முறை சம்மன் அனுப்பப்பட்டது. அப்போதும் அவர் ஆஜராகவில்லை. பின்னர், 8-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக முடியாது. வேண்டுமானால் எனது வீட்டுக்கு வந்து விசாரணை நடத்துங்கள் என்று ஹேமந்த் சோரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகளும் கடந்த 20-ம் தேதி ஹேமந்த் சோரன் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதன் பிறகு, அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு 9-வது முறையாக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த சம்மனுக்கும் அதிகமான பணிகள் இருப்பதால் விசாரணைக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக முடியாது என்று பதில் அனுப்பினார். இதைத் தொடர்ந்து, ஜனவரி 29 அல்லது 31 ஆகிய தேதிகளில் விசாரணை நடத்த நேரம் மற்றும் இடத்தை தேர்வு செய்து சொல்லுமாறு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பி இருக்கிறது.
இந்த மனுவுக்கு அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அவரை நேரில் சந்திக்க உள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.