பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், கடந்த மூன்று வாரத்தில் மட்டும், 220 குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வந்த பாகிஸ்தான், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கடும் நிதிச் சிக்கலில் இருக்கிறது. சொந்த நாட்டு மக்களுக்கு உணவு வழங்கக்கூட முடியாமல் திணறி வருகிறது. மக்கள் உணவுக்காக திண்டாடி வருகின்றனர். அந்நாட்டு மக்கள் சுகாதார மற்ற உணவுகளை உட்கொள்வதால், பல நோய் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.
அந்நாட்டில் குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைக்காததாலும், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும், நிமோனியா காய்ச்சலுக்கு தடுப்பூசி செலுத்தாததாலும், அதிக குழந்தைகள் மடிவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் நிலவும் கடும் குளிரின் காரணமாக, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் கடந்த சில வாரங்களாக கடும் குளிர் நிலவுகிறது. குறிப்பாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நிலவும், கடுமையான குளிரினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் நிலவும் கடுமையான குளிரின் காரணமாக, நிமோனியா காய்ச்சலால் அதிகரித்துள்ளது. அங்குள்ள குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மூன்று வாரங்களில் 10 ஆயிரத்து 520 குழந்தைகள் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கடந்த மூன்று வாரங்களில் 220 குழந்தைகள் நிமோனியா பாதிப்பால் உயிரிழள்ளனர்.
இறந்த குழந்தைகள் அனைவரும் ஐந்து வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் லாகூரில் மட்டும் 47 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தில் கடந்த ஆண்டு 990 குழந்தைகள் நிமோனியாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.