மதுரை : தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும், சிவன் கோயில்களிலும் இவ்விழா நாளை நடைபெறும். இதனையொட்டி, நாளை அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறையாகும். மேலும், பழனி முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு, இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் இலவச தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
பக்தர்கள் வசதிக்காக ரயில் நிலையம், சண்முக நதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அடிவாரம் செல்ல இலவச பஸ் இயக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
தற்பொழுது பக்தர்கள் வசதிக்காக, மதுரை – பழனி இடையே பிப்.11, பிப்.12 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கபடவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்து. அதன்படி, மதுரையில் இருந்து நாளை காலை 8.45க்கு புறப்படும் சிறப்பு ரயில் காலை 11.30க்கு பழனி சென்றடையும். மேலும், பழனியில் நாளை பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மாலை 5.45க்கு மதுரை வந்தடையும். இந்த சிறப்பு ரயில் சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, திருச்செந்தூர், பழநி முருகன் கோயில்களுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரை செல்கின்றனர். அந்த வகையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு குவிந்து வரும் பக்தர்கள், முருகனுக்கு அலகு குத்தியும், காவடி ஏந்தியும் பாத யாத்திரையாக வந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.