குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டதுதான் “இண்டி” கூட்டணி. அக்கூட்டணியின் எண்ணம் பலிக்காது என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா கூறியிருக்கிறார்.
பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் அங்கம் வகித்தார். இத்தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றிபெற்ற போதிலும், நிதீஷ்குமாரையே முதல்வராக்கியது.
ஆனால், 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிதீஷ்குமார் திடீரென கூட்டணியை முறித்துக் கொண்டார். பின்னர், காங்கிரஸ், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, முதல்வராகவும் தொடர்ந்து வந்தார்.
மேலும், பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கியக் கட்சிகளை திரட்டி “இண்டி” என்கிற பெயரில் மெகா கூட்டணியையும் அமைத்தார். எனினும், இக்கூட்டணிக்குள் ஒற்றுமை இல்லாமல் ஆரம்பம் முதலே குழப்பம் நிலவி வந்தது.
இந்த சூழலில், மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்க கடந்த சில தினங்களாகவே பா.ஜ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்பேச்சுவார்த்தையில் சுமுகத் தீர்வு காணப்படவே, கூட்டணியை முறித்துக் கொண்ட நிதீஷ்குமார், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர், அன்று மாலையே பா.ஜ.க. ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்றார்.
இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, “நிதீஷ்குமார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்பியது பா.ஜ.க.வுக்கு மகிழ்ச்சியான விஷயம். பீகார் மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளனர். ஐக்கிய ஜனதா தளம் மற்றும் நிதீஷ்குமாரின் உண்மையான கூட்டணி என்.டி.ஏ. மட்டுமே.
“இண்டி” கூட்டணி புனிதமற்ற, அறிவியலற்ற கூட்டணி. அவர்களின் எண்ணம் பலிக்காது. குடும்பம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் “இண்டி” கூட்டணி. பீகாரில் என்.டி.ஏ. ஆட்சி அமைக்கும் போதெல்லாம் மாநிலத்தின் வளர்ச்சி சாதனை படைக்கும்.
நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும். அதேபோல, 2025 பீகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்” என்றார்.