தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 7 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு காவிரிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லியில் காவிரிநீர் மேலாண்மை ஆணையத்தின் 38ஆவது கூட்டம் நடைபெற்றது. காவிரி ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக மாநில அரசின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் சார்பில் நீர்வளத்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, காவிரி தொழில்நுட்ப குழுத் தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் நீர் இருப்பு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடகா காவிரியில் தர வேண்டிய தண்ணீர் உள்ளிட்டவை தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் முடிவில் மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 7 புள்ளி 5 டிஎம்சி தண்ணீரை திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரிநீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய 3 மாதங்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 2 புள்ளி 5 டிஎம்சி தண்ணீர் கர்நாடகா திறந்து விட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.