தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்திக்கிற வகையில் தரம் தாழ்ந்து இழிவாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை வன்மையாக கண்டிக்கிற வகையில் இன்று பிற்பகல் 3 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவையில் தி.மு.க. உறுப்பினர்கள் எழுப்பிய பிரச்சனைக்கு பதில் கூறிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாகரிகமற்ற முறையில் தமிழக அரசையும், தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இழிவுபடுத்தி பேசியதன் மூலம் 8 கோடி தமிழ் மக்களையும் அவமதித்திருக்கிறார். ஏற்கனவே “புதிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை எனில் தமிழகத்திற்கு நிதி தரமாட்டோம்” என்று ஆணவத்தோடு பேசியவர் தான் இன்றைக்கு மக்களவையில் இத்தகைய ஜனநாயக விரோத கருத்துக்களை கூறியிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
மக்களவையில் தர்மேந்திர பிரதான் பேசும்போது தமிழக அரசு மாணவர்களை தவறாக வழிநடத்துகிறது, மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகிறார்கள், நாகரீகமற்றவர்கள், நேர்மையற்றவர்கள் என்று கூறி தரம் தாழ்ந்த பேச்சின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அவமதித்திருக்கிறார். இதன் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் , தமிழக அரசையும் அவமதித்திருக்கிறார். தமிழக முதலமைச்சரை “யார் அந்த சூப்பர் முதலமைச்சர்?” என்று எதேச்சதிகார முறையில் பேசியிருக்கிறார். இத்தகைய பேச்சின் மூலம் பா.ஜ.க.வின் பாசிச அணுகுமுறை வெளிப்பட்டிருக்கிறது. மும்மொழி திட்டத்தை ஏற்பதும், ஏற்காததும் தமிழக அரசின் உரிமையாகும். மும்மொழி திட்டத்தின் மூலமாக இந்தியை திணிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. இந்தி பேசுகிற மாநிலங்களில் ஒருமொழி திட்டம் மட்டுமே அமுலில் இருக்கும்போது, இந்தி பேசாத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மும்மொழி திட்டத்தை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? மும்மொழி திட்டம் என்ற போர்வையில் புதிய கல்விக்கொள்கையின் மூலமாக பிஎம் ஸ்ரீ பள்ளிகளின் வாயிலாக இந்தியை திணிப்பது தான் பா.ஜ.க.வின் திட்டமாகும்.
நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அமைச்சரவையின் முடிவினால் வந்தது தான் புதிய கல்விக்கொள்கை. புதிய கல்விக்கொள்கையை திணித்து இந்தியை புகுத்தி பாடத் திட்டங்களில் இந்துத்துவா கருத்துக்களை திணிப்பது தான் ஒன்றிய அரசின் நோக்கமாகும். நேரு உறுதிமொழியின்படி இந்தி பேசாத மாநிலங்களுக்கு ஆங்கிலம் தான் ஆட்சி மொழியே தவிர இந்தி அல்ல. இதற்கு சட்டப்பாதுகாப்பும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு பிறகும் ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்தியை திணிக்க முயன்றால் அதற்கு மிகப்பெரிய விலையை பா.ஜ.க. வழங்கப்போகிறது. ஒன்றிய கல்வி அமைச்சர் மக்களவையில் கொடுத்த தவறான தகவலுக்கு ஆதாரத்துடன் மறுப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் உடனடியாக கடிதம் எழுதி உண்மையை தோலுரித்து காட்டியிருக்கிறார். அதற்காக தமிழக முதலமைச்சரின் அரசியல் பேராண்மையை பாராட்டுகிறேன்.
எனவே, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புண்படுத்திக்கிற வகையில் தரம் தாழ்ந்து இழிவாக பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்களை வன்மையாக கண்டிக்கிற வகையில் இன்று (11.03.2025) செவ்வாய்க்கிழமை மாலை 03:00 மணியளவில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக எம்.கே.பி. நகரில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நமது கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானவர்கள் பங்கேற்பதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக் குரலாக ஒலிக்க வேண்டும். அனைவரும் அவசியம் அணிதிரண்டு வரும்படி அழைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.