பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் தனது ‘ஃபதா’ (Fatah) ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. இது இரண்டாவது ஏவுகணை சோதனை ஆகும்.
120 கி.மீ. தொலைவு கொண்ட இந்த ஏவுகணை, தற்போது நடந்துவரும் சிந்து ராணுவப் ஒத்திகையின் ஒரு பகுதியாக ஏவப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை துருப்புக்களின் தயார்நிலையை உறுதி செய்வதையும், ஏவுகணையின் தொழில்நுட்ப அம்சங்களைச் சரிபார்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர்-சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) தெரிவித்துள்ளது.
இந்த சோதனைக்கு முன்னதாக சனிக்கிழமையன்று அப்தாலி ஏவுகணை ஏவப்பட்டது. இது 450 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் திறன் கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா ஆகியோர் இந்த சோதனைக்காக ISPR க்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எதிர்கொள்வதற்கான தயார்நிலையை உறுதி செய்வதில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
நாட்டின் பாதுகாப்புக்காக முப்படைகளின் தயார்நிலை மற்றும் தொழில்நுட்பத் திறமையை நிருபிக்கும் வகையில் ஏவுகணை சோதனை அமைந்துள்ளது எனவும் பாகிஸ்தான் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.