மேடே என்றால் என்ன? விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்தவது ஏன்?

Estimated read time 1 min read

அகமதாபாத்தின் சர்தார் வலாபாய் பட்டேல் விமான நிலயத்தில் இருந்து கிளம்பிய அந்த விமானம் மதியம் 1.18 மணியளவில், அருகில் இருந்த மருத்துவ கல்லூரி மாணவர் விடுதியில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தை இயக்கிய 2 பைலட்கள், பிற பயணிகள், விமான ஊழியர்கள் என அனைவரும் சிக்கினர். விபத்து ஏற்படுவதற்கு முன்னர், விமானத்தை ஓட்டிய பைலட் ‘மேடே’ அழைப்பு ஒன்றை விடுத்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பதிலளிப்பதற்குள் விமானம் விபத்துக்குள்ளானது. மேடே என்றால் என்ன?

விமானிகள் மிகவும் அவசர கால சூழ்நிலைகளில் மட்டுமே ‘மேடே’ என்கிற வார்த்தையை உச்சரிப்பர். இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அவசரகால அழைப்புச் சொல்லாகும். விமானி ஒருவர் ‘மேடே’ என்று உச்சரிக்கும் பொழுது அது மிகவும் தீவிரமான, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையை குறிக்கிறது. விமானி ஒருவர் ‘மேடே’ என்று உச்சரித்தால் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் அல்லது அருகில் உள்ள மற்ற விமானிகள் உடனடியாக அந்த அழைப்பிற்கு கவனம் செலுத்த வேண்டும். ‘மேடே’ என்ற வார்த்தை வேறு எந்த ஒலிகளுடனும் அல்லது உரையாடல்களுடனும் கலக்காத வகையில் தெளிவான அவசரகால செய்தியை வழங்குகிறது.

விமானியிடமிருந்து இந்த வார்த்தை பெறப்பட்டவுடன் அவசர கால நடவடிக்கைகள் உடனடியாக தொடங்கப்படும். மீட்புப் பணிகள், உதவி நடவடிக்கைகள் விரைவாக ஒருங்கிணைக்கப்படும். இது பிரெஞ்சு வார்த்தையான M’aider (எனக்கு உதவுங்கள்) என்பதிலிருந்து பெறப்பட்டது.

இது சர்வதேச தொலைதொடர்பு ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட, உலகளாவிய அவசரகால அழைப்பாகும். மொழிகளைக் கடந்து எந்த நாட்டினராலும் இந்த அவசர அழைப்பு புரிந்து கொள்ளப்படும். இது SoS (Save Our Soul) என்கிற ஆங்கிலச் சொற்றொடரின் ஒரு வடிவமாகும். விமானிகள் ஆபத்தான நிலையில் இருக்கும் பொழுது ‘மேடே’, ‘மேடே’, ‘மேடே’ என்று மூன்று முறை சொல்லி பின்னர் அவர்கள் தங்கள் விமானத்தின் அடையாளத்தையும் தெரிவித்து உதவி கோருவர். ‘மேடே’ என்று மூன்று முறை சொல்வதன் மூலம் தங்கள் உயிருக்கும் பயணிகளின் உயிருக்கும் ஆபத்து இருப்பதை உலகிற்கு காட்டி உடனடி உதவி பெறுவதே இதன் நோக்கமாகும்.

எப்போதெல்லாம் மேடே அழைப்பு விடுக்கப்படும்?

விமான பயணத்தில் Mayday என்பது விமானத்திற்கோ அல்லது பயணிகளுக்கோ ஆபத்தை ஏற்படுத்தும் அவசரகால சூழ்நிலையை அறிவிக்க விமானிகள் பயன்படுத்தும் சர்வதேச அளவிலான ஒரு

சமிக்ஞை. வானொலியில் வாய்மொழியாக விடுக்கப்படும் இந்த துயர அழைப்பின் போது, பெரும்பாலும் 3 முறை மேடே என்று மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான அவசரநிலை குறித்து விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை மற்றும் பிற விமானங்களுக்கும் இந்த ‘மேடே‘ அழைப்பு எச்சரிக்கிறது. விமானம் தீப்பிடித்தாலோ, கடலில் விழுந்து மூழ்கினாலோ அல்லது பிற கடுமையான சூழ்நிலைகளின் போது விமானிகள் மே டே என்ற வார்த்தையை சொல்கிறார்கள்

விமானத்தின் எஞ்சின் பழுதாகும் போது மேடே அழைப்பு விடுக்கப்படும் அதே போல தீ விபத்து ஏற்பட்டாலும் இந்த அழைப்பு விடுக்கப்படும் விமானத்தில் எரிபொருள் தீரும் போதும், மருத்துவ அவசரநிலைகளின் போதும் கூட மே டே பயன்படுத்தப்படும். இப்படிப்பட்ட சூழல்களில் விமானத்தை இயக்கும் விமானிகள் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு ‘Mayday’அழைப்பு விடுப்பார்கள்.

இது மட்டுமல்லாமல் விமானிகள் தங்கள் விமானத்தின் ட்ரான்ஸ்பாண்டரில் சில குறிப்பிட்ட நான்கு இலக்க குறியீடுகளை உள்ளிடுவர். இதன் மூலம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களுக்கு தங்களின் அவசர நிலையை தெரிவிக்க முடியும். இவை காட்சி ராடாரில் தெளிவாக காட்டப்படும். 7700 என்கிற குறியீடு பொதுவான அவசரநிலை குறியீடாகும். ‘மேடே’ அல்லது ‘பான்-பான்’ அழைப்புகளுடன் அல்லது அந்த அழைப்புகளுக்குப் பதிலாக இந்த குறியீடு பயன்படுத்தப்படலாம். இது பொதுவான எந்த வகையான அவசர நிலைக்கும் பொருந்தும். 7600 ரேடியோ தகவல் தொடர்பு செயலிழப்பைக் குறிப்பதற்கு பயன்படுத்தப்படும் குறியீடு ஆகும். அதாவது விமானத்தை ஓட்டுபவர் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அறையுடன் பேச முடியாத சூழ்நிலையைக் குறிக்கிறது.

7500 என்கிற குறியீடு விமானத்தை கடத்துவது அல்லது சட்டவிரோதமாக தலையீடு ஏற்பட்டால் அதை உணர்த்த பயன்படுத்தப்படும் குறியீடாகும். இது மிக உயர்ந்த பாதுகாப்பு குறியீடாகும். விமானிகள் முதலில் பறப்பது, விமானத்தை சரியான வழியில் செலுத்துவது, தகவல் தொடர்பு என முன்னுரிமை வரிசையை பின்பற்றுவார்கள். அதாவது முதலில் விமானத்தை கட்டுப்படுத்தி, அதை சரியான திசையை நோக்கி செலுத்தி, அதன் பிறகு தான் அவசர காலங்களில் தகவல்களை விமான கட்டுப்பாட்டாளர்களுக்கு தெரிவிப்பர்.

Please follow and like us:

You May Also Like

More From Author