அண்ணா பல்கலைக்கழகத்திற்கே இந்த கதியா?- அன்புமணி ராமதாஸ் வேதனை

Estimated read time 1 min read

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக பேராசிரியர்களுக்கு உடனடியாக பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் மொத்தமுள்ள 20 வளாகங்களில் பணியாற்றி வரும் 502 பேராசிரியர்கள், 1635 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 2100-க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பணி நீட்டிப்பு இன்று வரை வழங்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, சென்னை தவிர்த்த பிற ஊர்களில் அமைந்துள்ள 16 வளாகங்களில் பணியாற்றி வரும் 332 தற்காலிக பேராசிரியர்களுக்கு இன்று வரை ஊதியமும் வழங்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழக பணியாளர்கள் விஷயத்தில் திமுக அரசு காட்டும் அலட்சியம் கண்டிக்கத்தக்கது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்னையில் 4 வளாகங்களும், கோவை, திருச்சி, மதுரை, திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, அரியலுர் உள்ளிட்ட 16 நகரங்களில் மண்டல வளாகங்களும் செயல்பட்டு வருகின்றன. சென்னை வளாகங்களில் 170 பேராசிரியர்கள், 713 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 884 தற்காலிகப் பணியாளர்களும், வெளியூர்களில் உள்ள 16 வளாகங்களில் 332 பேராசிரியர்கள், 922 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என மொத்தம் 1254 தற்காலிக பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒருமுறை பணி நீட்டிப்பு வழங்கப்படும்.

ஆனால், ஜூலை முதல் 6 மாதங்களுக்கு இன்னும் பணி நீட்டிப்பு ஆணை வழங்கப் படவில்லை. அதனால் தங்களின் எதிர்காலம் என்ன ஆகுமோ? என்ற கவலையில் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள் வாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படுமா? தற்காலிக பேராசிரியர்களுக்கான ஜூன் மாத ஊதியம் எப்போது வழங்கப்படும்? என்பது குறித்து தமிழக அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அதை விட அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால், பேராசிரியர்களுக்கும், தற்காலிக பணியாளர்களுக்கும் ஜூலை, ஆகஸ்ட் ஆகிய இரு மாதங்களுக்கு மட்டும் பணி நீட்டிப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு அவர்கள் அனைவரும் பணி நீக்கப்பட்டு, மனிதவள நிறுவனங்கள் மூலம் பேராசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் குத்தகை முறையில் நியமிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழக அரசின் திட்டம் உண்மையானால் அது மிகவும் ஆபத்தானது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டும் தான் இனி நியமிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதன் பதிவாளர் ஆணையிட்டிருந்தார். அதை பா.ம.க. சார்பில் கடுமையாகக் கண்டித்திருந்தேன். அதைத் தொடர்ந்து அத்திட்டத்தைக் கைவிடுவதாக அண்ணா பல்கலை. அறிவித்திருந்தது. ஆனால், அடுத்த 10 மாதங்களில் மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் துடிப்பதை ஏற்க முடியாது. தமிழ்நாட்டில் முதன்மை அரசு பல்கலைக்கழகமாக திகழ்வது அண்ணா பல்கலைக்கழகம் தான். அங்கேயே பேராசிரியர்களுக்கும், பிற பணியாளர்களுக்கும் பணிப் பாதுகாப்பற்ற சூழல் நிலவினால் பிற அரசு பல்கலைக்கழகங்களின் நிலை குறித்து எதுவும் கூறத் தேவையில்லை. பேராசிரியர்களுக்கே பணிப்பாதுகாப்பற்ற நிலை நிலவினால் அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித்தரம் சீரழிந்து விடும். அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு உடனடியாக பணி நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும். அதேபோல், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்களையும், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும் குத்தகை முறையில் நியமிக்கும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும். அதற்கு பதிலாக, தற்காலிக பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை அவர்களின் தகுதி அடிப்படையில் பணி நிலைப்பு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author