முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மோடிக்கு எழுதிய கடிதத்தில், ”’எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை- போடிநாயக்கனூர் ரயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருகிறீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக இருக்கும்” என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், ஓ,பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சேர்க்க எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த வேளையில் ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தால் அது அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறும்.