ரஷ்யாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்…சுனாமி அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

Estimated read time 1 min read

கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.7 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கம், பசிபிக் பெருங்கடலில் 19.3 கி.மீ ஆழத்தில், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரத்திலிருந்து 125 கி.மீ கிழக்கு-தென்கிழக்கில் மையம் கொண்டிருந்தது. இதனால், ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் வானிலை ஆய்வு மையம், 1 முதல் 3 மீட்டர் உயர சுனாமி அலைகள் ஜப்பானின் பசிபிக் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் கம்சாட்கா பகுதியில் 3 முதல் 4 மீட்டர் உயர அலைகள் பதிவாகியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ஹவாய், குவாம், பிலிப்பைன்ஸ், மற்றும் பிற பசிபிக் தீவுகளுக்கும் 0.3 முதல் 3 மீட்டர் உயர அலைகளுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. கம்சாட்காவில் ஒரு மழலையர் பள்ளி சேதமடைந்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் உள்ளூர் ஆளுநர் விளாடிமிர் சோலோடோவ் தெரிவித்தார். ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, நிலநடுக்கம் குறித்து அவசரக் குழு அமைத்து, மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறார்.

ரஷ்யாவின் சகலின் பகுதியில் உள்ள செவிரோ-குரில்ஸ்க் நகரில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும், கடற்கரையில் இருந்து விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 6.9 ரிக்டர் அளவிலான பின்னதிர்ச்சியும் பதிவாகியுள்ளது. புகுஷிமா அணுமின் நிலையத்தில் தற்போது எந்தவித பாதிப்பும் இல்லை என்று டோக்கியோ எலக்ட்ரிக் பவர் நிறுவனம் (TEPCO) உறுதிப்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம் மற்றும் சுனாமி எச்சரிக்கை குறித்து மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். “இந்தியா இந்தப் பேரிடரை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பசிபிக் பகுதியில் உள்ள நமது நட்பு நாடுகளுக்கு உதவ தயாராக இருக்கிறோம்,” என்று அவர் கூறினார். பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டபோதும், இந்தப் பேரிடர் குறித்து ஒரு ஒருமித்த குரல் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த நிலநடுக்கம், கம்சாட்கா தீபகற்பத்தில் 1952-ல் 9.0 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர் பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா, புவித்தட்டு இயக்கங்கள் காரணமாக அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு உள்ளாகிறது. மேலும் தகவல்கள் வெளியாகும்போது, பாதிப்புகள் குறித்து தெளிவாகத் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author