செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சி உலகளவில் வேகமாக பரவுகிறது. இதன் தாக்கம் வேலைவாய்ப்பில் மட்டுமல்லாமல் கல்வித் துறையிலும் எதிர்காலத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அடுத்த 18 ஆண்டுகளில் பாரம்பரிய கல்லூரிகள் காலாவதியாகலாம். எனது குழந்தை கல்லூரிக்கு செல்லுமா என்பதே எனக்கு சந்தேகமாக உள்ளது” என தெரிவித்தார்.
அதிலும் மேலாக, “AI எப்போதும் மனிதர்களைவிட புத்திசாலியாக மாறும். அதன் காரணமாக அறிவை மையமாகக் கொண்டு நடத்தப்படும் கல்வி முறைகள் பொருத்தமற்றதாக மாறும். எதிர்காலத்தில், உணர்வுகளைப் புரிந்து கொள்வது, சிக்கல்களை தீர்ப்பது, தனிப்பட்ட மதிப்பீடு செய்யும் திறன்கள் போன்ற மனிதச் சிந்தனைகளை ஊக்குவிக்கும் கல்வி அமைப்புகளே அவசியமாகும்” என ஆல்ட்மேன் வலியுறுத்தினார்.
அத்துடன், “தொழில்துறை புரட்சி வந்த காலத்தில் நவீன மனிதர்களின் வாழ்க்கை எளிமையானதாக மாறியது போல, AI காலத்திலும் இதுபோல் பெரிய மாற்றம் நிச்சயமாக நிகழும். அந்த மாற்றத்தை குழந்தைகள் சாதாரணமாக ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், பெற்றோர்களுக்கு அதனை ஏற்று செயல்படுவது சிக்கலாக இருக்கும்” என்றும் அவர் கூறினார். AI வளர்ச்சியால் கல்வியின் அடையாளமே மாறும் என சாம் ஆல்ட்மேனின் இந்தக் கருத்து கல்வி வட்டாரத்தில் பெரும் விவாதத்துக்கு வழிவகுத்துள்ளது.