அதோடு தீராத அன்பும், ஈர்ப்பும் உண்டு. திருவாரூரில் தெற்கு வீதி முனையிலும், கலைஞர் படித்த வடபாதி சோமசுந்தரம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் கலைஞர் அவர்கள் பேச வருகிறார் என்றால் பேதம் ஏதுமின்றி கமலாலயம் குளத்தை சுற்றியும், மற்ற தெருக்களிலும் தேர் திருவிழாவோ என வியக்கும் வண்ணம் இரவு வரை கூட்டம் திரண்டு கிடக்கும்.
கரகரத்த குரலில் “அன்பார்ந்த” எனும்போது ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை கண்டிருக்கிறேன், காவிரியோடு கலைஞரின் கன்னல் தமிழ் சுவையையும் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள்.
மதிப்பெண் குறைத்து வாங்கியதால் தலைமையாசிரியருக்கு பயந்து கமலாலய குளத்தின் உள்பக்கம் ஒளிந்திருக்க, தலைமையாசிரியர் கண்டுபிடித்து “தெட்சிணாமூர்த்தி, தெட்சிணாமூர்த்தி…” என்று கூவிக்கொண்டே துரத்த, கலைஞர் ஓடிய கதைகளை அவர் வாய்மொழியாக கேட்க வாய்த்தவர்கள் நாங்கள்.
“பாதிக்கிணறு தாண்டும் பழக்கம் எனக்கு எப்போதும் கிடையாது. நான் சிறுவனாக இருந்தபோது, எனது நண்பன் தென்னவனுடன் திருவாரூர் குளத்தில் நீந்திக்கொண்டிருந்தேன்.
குளத்தில் நீந்தி மைய மண்டபத்தை அடைய வேண்டும் என்பது தான் எங்கள் இலக்கு. பாதி தூரம் கடந்து சென்று விட்டோம்.
‘என்னால் முடியவில்லை. திரும்பி விடலாம்’ என்றார் நண்பன். திரும்புவதென்றால் முக்கால் பகுதி நீந்த வேண்டும். மைய மண்டபம் என்றால் கால் பகுதி தான் நீந்த வேண்டும்’ என்று சொன்னேன்.
இருவரும் நீந்தி மைய மண்டபத்தை அடைந்தோம். எனவே எதையும் பாதியில் விட்டுச் செல்வது என் பழக்கம் இல்லை.
எல்லாவற்றுக்கும் மேல் அரசியல் நான் விரும்பி தேர்ந்தெடுத்த பாதை” – என்று கலைஞரே கூற கலைஞரின் மலரும் நினைவுகளை கமலாலய குளிர் தென்றலோடு சுவாசித்தவர்கள் நாங்கள்.
உரையாற்றி விட்டு நள்ளிரவானாலும் காட்டூர் சென்று அவரது தாயார் அஞ்சுகத்தம்மாளின் சமாதிக்கு அஞ்சலி செலுத்த காரில் கமலாலயம் மேல்கரை வழியாக செல்வார்.
நாங்கள் மேல்கரையில் குடியிருந்தோம். வீட்டு வாசலில் காத்திருப்போம், அந்நேரத்திலும் கண்ணாடியை இறக்கிவிட்டு இருகை கூப்பி வணங்கிச் செல்வதை மிக அருகில் காண கிடைத்தவர்கள்.
திருக்குவளையில் அரசு கண் மருத்துவமனையும், சாலையும் கலைஞர் வந்த பின்னர் அமைக்கப்பட்டு மிகமிக பின் தங்கிய மக்கள் பயனுற செய்தவர்.
திருக்குவளை போன்ற வசதியற்ற குக்கிராமத்திலிருந்து வந்து அரசியல் சாணக்கியராகவும், IQ 100 தாண்டியுள்ள ஒரே மனிதர் என்றெல்லாம் கேள்வியுறும் போது அவர் மீதான பிரமிப்பு உயர்ந்து வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.
என் தந்தை தீராத தமிழ்த் தாகம் உடையவர் 1330 திருக்குறளையும் எப்படிக் கேட்டாலும் சொல்லக் கூடிய ஆற்றலுடையவர். பணியில் நேர்த்தியும், வேகமும், விவேகமும் நிறைந்தவர்.
திருக்குவளையில் ஏதோ இருக்கிறது, அங்கிருந்து வருபவர்கள் எல்லாம் எப்படி இப்படி என்று கேலி பேசிய நினைவுகள் உருண்டோடுகிறது.
நான் தளர்வடையும் போதெல்லாம், கலைஞருக்கும் 24 மணி நேரம் தான் நமக்கும் 24 மணி நேரம் தான் என நினைத்து உற்சாகம் கொள்வதுண்டு.
நான் பொறியாளராக பணியேற்ற பின் கலைஞரிடம் பணியாற்றிய சில ஆட்சியளார்களை பணி நிமித்தம் சந்தித்த போது,
“உங்க ஊர்காரர் தமிழ் மட்டும் இல்லம்மா ஆங்கிலத்திலேயும் வெளுத்துக்கட்டுவார் தெரியுமா” என்று கூறக் கேட்டிருக்கிறேன்.
எடுத்துக்காட்டு…
சில காரணங்களை சரி செய்யவில்லை என்பதற்காக “NOT APPROVED” என்று எழுதி கையெழுத்திட்டதாகவும். சில மணி நேரத்தில் சரி செய்து மீண்டும் பார்வைக்கு வைத்து விட்டு என்ன நடக்குமோ என காத்திருந்தபோது மிக எளிதாக அடித்தல் திருத்தலின்றி “NOTE APPROVED” என ஒரே ஒரு எழுத்தை சேர்த்து அனைவரையும் வியக்க வைத்ததாக கேள்வியுற்றிருக்கிறேன்.
கலைஞர் என்னை அதிகம் பிரமிக்க வைத்த தலைவர்.
கலைஞர் பாடலில் என்னைக் கவர்ந்த பாடல் “ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே”
வசனம்: பராசக்தியில் ஓடினான் ஓடினான் வாழ்க்கையின் எல்லைக்கே ஓடினான்.
காவிரியை பற்றிய கவிதை, ரோமபுரி பாண்டியன் என எண்ணிலடங்கா இலக்கியங்கள்.
கரகரக்கும் குரலில் பாடிய கவிதையின் சுவையை இன்றும் கேட்க செவிகள் ஏங்கியே தவிக்கிறது.
முதல் பட்டதாரிகளுக்கு அய்ந்து மதிப்பெண் வழங்கி, எளியோரும் உயர் கல்வி பெற வைத்தவர்.
அரசு ஊழியர்கள் இறந்தால், உடனடியாக இறுதி சடங்கிற்கான தொகையை வழங்க ஆணை பிறப்பித்தவர்.
குமரியில் வள்ளுவரின் சிலையை பார்த்தபோது கைகூப்பி தொழுதேன் கலைஞரை.
மண் குடிசையும் மாளிகையாக கல்வியொன்றே தீர்வென உணர்ந்ததோடு இடஒதுக்கீடு மண்டல் கமிஷன் மூலம் பெற்று தந்த பெருந்தகை.
தான் எப்பால் என்று படைத்தவன் தப்பால் தவித்தோருக்கு, முப்பால் சுவையுணர்ந்த தமிழ்பால் வழியே திருநங்கை என்றோர் பெயர் சூட்டி துயர் துடைத்த தாய்மையல்லவா… அந்த பேரன்பு.
கலைஞர் மீது என் அப்பா கொண்டிருந்த அன்பிற்கு அளவே கிடையாது. எழுதிக்கொண்டே போகலாம். இது நினைவுநாள் அஞ்சலியல்ல. மறைந்தவர்களுக்குதானே நினைவஞ்சலி. வாழும் புகழுக்கோர் வாழ்த்து செய்தி. கலைஞரை பற்றி எவ்வளவு எழுதினாலும் நிறைவு கொள்வதில்லை மனம்.
கலைஞரே நீர் முட்டியுர்த்தி முழங்கிய போதெல்லாம் எங்களின் கக்கத்து துண்டு தோளேறி முண்டாசு ஆனது. மேலும் மேலும் எழுதவே தோன்றும். தள பணிகள் பார்த்துக் கொண்டிருந்தாலும், நினைவெங்கும் கலைஞரின் குரலே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
அன்புடன்
உங்க ஊர் பொண்ணு.
கோ. லீலா,
சுற்றுச்சூழலியல் எழுத்தாளர்.