மண்வாசம்

Estimated read time 1 min read

Web team

IMG_20230814_104744.jpg

மண்வாசம் !
நூல் ஆசிரியர் : கவிஞர் கார்முகிலோன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை-600 018. பக்கம் 80, விலை : ரூ.60.
பேச : 98414 36213

******
மின்னல் கலைக்கூடத்தின் பெருமைமிகு படைப்பாக வந்துள்ளது மண்வாசம். பெயரால் மட்டுமல்ல ஹைக்கூ கவிதைகளிலும் மண்வாசம் உள்ளது. கவிஞர் கார்முகிலோன் புரவலர் மட்டுமல்ல நல்ல படைப்பாளி. பன்முக ஆற்றலாளர். ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக் கவிதை மட்டுமல்ல கட்டுரைகளும் வடிக்கும் ஆற்றலாளர். மிக நேர்த்தியாக உள்ளன. மின்னல் கலைக்கூடத்தில் கவிஞர் வசீகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

நூல் ஆசிரியர் கவிஞர் கார்முகிலோன் அவர்கள் முதல் ஹைக்கூ நூல் காணி நிலம். இது இரண்டாவது ஹைக்கூ நூல். ‘உள்ளத்துளியைச் சுண்டுகின்றன’ கவிஞர் வசீகரன் அணிந்துரை அழகுரை.

தீயாய் எரிக்கும்
தீயோர் நட்பு
அறிவால் தெளிக !

இன்றைய இளையதலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டிய ஹைக்கூ. எந்தவித கெட்டபழக்கமும் இல்லாத மிக நல்ல் தந்தைக்கு எல்லாவித கெட்ட பழக்கமும் உள்ள மகன் இருக்கிறான். காரணம் தீய நட்பு. தீய நட்பு தவிர்த்தால் வாழ்வில் நலம் பெறலாம். வளம் பெறலாம். தந்தையின் நல்ல பெயரைக் காப்பாற்றலாம். இவ்வாறு பல சிந்தனைகளை ஒரு நல்ல ஹைக்கூ கவிதை விதைத்து விடுகின்றது.

படைப்பாளி உணர்வது ஒரு உணர்வு தான். ஆனால் படிப்பாளியாக வாசகர்கள் உணர்வது பல்வேறு உணர்வுகள். அது தான் ஹைக்கூவின் வெற்றி. பத்துப்பக்க கட்டுரையில் சொல்ல வேண்டிய கருத்துக்களை மூன்றே வரிகளில் ஹைக்கூ உணர்த்தி விடும்.

நம் நாட்டில் வரதட்சணைக் கொடுமை இன்னும் ஒழியவில்லை. ஒழிய வேண்டும் என்பதே படைப்பாளிகள் விருப்பம்.

முறித்தாள் காதலை முதிர்கன்னி
இன்னும் இரண்டு
அக்கா !

வரதட்சணைக் கொடுமையை உணர்த்திடும் மற்றொரு ஹைக்கூ.

காலனே ஆனாலும்
கரம் பிடிக்கத் தயார்
புலம்பும் முதிர்கன்னி !

வாழ்வியல் தத்துவத்தை யதார்த்தத்தை மூன்றே வரிகளில் முத்தாய்ப்பாக உணர்த்திடும் ஹைக்கூ கவிதைகள் பல இருந்தாலும் பதச்சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு இதோ!

முடிந்தவரை உதவிடு
முயற்சியோடு வாழ்ந்திடு
வானம் வசப்படும்!

சிலர் முடிவு எடுப்பதற்குத் தயங்கியே காலத்தை கழித்து வருகின்றனர். துணிந்து சில முடிவுகளை எடுத்தால் வாழ்வில் சிறக்கலாம் என்பதை நமக்கு உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

செக்குமாடு வாழ்க்கையிலே!
தேடும் வெற்றி கிடைக்காது
துணிவே துணை !

எது வாங்கினால் எது இலவசம் என்று கேட்கும் அளவிற்கு மனிதர்கள் இலவச அடிமைகள் ஆகி விட்டனர். பொருளின் தரத்தைப் பார்க்காமல் இலவசத்தைப் பார்ப்பது மடமை என்பதை உணர்த்திடும் ஹைக்கூ.

இலவச இணைப்பென்றால்
எதற்கும் தயார் தான்
விந்தை மனிதன் !

வேடிக்கை மனிதர்களின் மனநிலை மாற வேண்டுமென்பதே படைப்பாளிகளின் கவலை. தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சி மனிதர்களின் மனதை பாழ்படுத்தி வருகின்றது. அன்றைய கதைகள் அறநெறி போதிப்பதாக இருந்தன.

இன்றைய தொலைக்காட்சித் தொடரின் கதைகள், பிஞ்சுநெஞ்சங்களில் நஞ்சு விதைக்கும் விதமாக பழிக்குப் பழி வாங்குதல், சதி செய்தல், தீட்டம் தீட்டுதல், கொலை செய்தல் என்று எதிர்மறையான சிந்தனையை விதைத்து வருகின்றன என்ற உண்மையை உணர்த்திடும் ஹைக்கூ.

வீட்டிற்குள் விஷ நாகம்
சீரியல் வடிவத்தில்
உஷார்! ஜாக்கிரதை !

தொலைக்காட்சி அடிமைத்தனத்தை உணர்த்திடும் மற்றொரு ஹைக்கூ!

இரவும் பகலும் அறியாது
சின்னத் திரையே கதி என்று
இருக்கின்றாரே! கொடுமையடா !

இன்றைய நாட்டு நடப்பை அப்படியே படம்பிடித்துக் காட்டி வெற்றி பெறுகின்றார் கவிஞர் கார்முகிலோன். ஹைக்கூ மழை பொழிந்துள்ளார்.

பெரும்பான்மை நிரூபிக்க
ஏராள பணச்செலவு
அரசியல் வியாபாரம் !

காந்தி, காமராசர், கக்கன் போன்ற நேர்மையாளர்கள் இருந்த அரசியல் இன்று வியாபாரிகள் கையில் போன வேதனையை நன்கு பதிவு செய்துள்ளார். பாராட்டுக்கள்.

இன்று நாட்டில் கவுரவக் கொலை, சாதியக் கொலை நடந்து வருவது வெட்கக்கேடு. மனிதாபிமானமற்ற செயல். மனித நேயம் மறந்து, மனிதன் என்பதையும் மறந்து விலங்காக மாறி வரும் அவலம் சுட்டும் ஹைக்கூ.

மூட நம்பிக்கைகளைச் சாடும் விதமாகவும் ஹைக்கூ எழுதி உள்ளார்.

பூனை குறுக்கிட்டதால்
சகுனம் சரியில்லையாம்
போக்கற்ற மனிதர்கள் !

கடவுளே காப்பாற்று என்று பக்தர்கள் வேண்டுகின்றனர். ஆனால் அந்தக் கடவுளின் உண்டியலே காணாமல் போகும் நிகழ்வுகளும் நாட்டில் நடந்து வருகின்றது.

உடைக்கப்பட்டது உண்டியல்
தூக்கத்தில் சாமி
துக்கத்தில் மக்கள் !

காதலைப் பாடாத கவிஞர் இல்லை. காதலைப் பாடாதவர் கவிஞரே இல்லை. கவிஞர் கார்முகிலோன் அவர்களும் காதலைப் பாடி உள்ளார்.

இதயத்தின் துடிப்பில்
உன் பெயர் கேட்கின்றேன்
என்ன இது புரியவில்லை!

இன்றைய ஏமாற்று அரசியல்வாதிகள் பற்றிய படப்பிடிப்பு நன்று. சிந்திக்க வைக்கின்றார்.

படித்த முட்டாளாய் நம்மை
பரிதவிக்கச் செய்து விட்டு
கொழிக்கின்றான் அரசியல்வாதி.

இலக்கியத்தில் இனியது கவிதை. கவிதையில் இனியது ஹைக்கூ. படிக்கும் வாசகர்கள் உள்ளத்தில் சிந்தனை மின்னலை உருவாக்கி உள்ளார். தான் உணர்ந்தவற்றை படிக்கும் வாசகர்களுக்கும் உணர்த்தும் வண்ணம் அற்புதமான ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூலாசிரியர் கவிஞர் கார்முகிலோன் அவர்களுக்கு பாராட்டுகள்.

குறிப்பு : வேண்டுகோள் – அடுத்த பதிப்பில் ஆங்கிலச் சொல்லும், வட சொல்லும் கலப்பின்றி வெளியிட வேண்டுகிறேன்.

Please follow and like us:

You May Also Like

More From Author