ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் துறையில் சீனா மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கைகள் தொடர்பாக பாகுபாடு எதிர்ப்பு விசாரணை மேற்கொள்வதாக சீனா அறிவித்துள்ளது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் 13ஆம் நாள் கூறுகையில்,
கடந்த ஆண்டுகளில், ஒருங்கிணைந்த மின்சுற்றுகள் துறையில் சீனா மீது அமெரிக்கா தொடர்ச்சியாக தடை மற்றும் கட்டுபாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த பாதுகாப்புவாத நடைமுறைகள், சீனா மீதான பாகுபாடு காட்டுவதாக சந்தேகிக்கப்படுகிறது. முன்னேறிய கணினி சில்லுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர் தொழில் நுட்ப தொழில்துறைகளில் சீனா வளர்வதை இது அடக்குகின்றது.
சீனாவின் வளர்ச்சி நலன்களுக்கு மட்டுமல்ல, உலகளாவிய செமி கண்டக்டர்கள் தொழில்துறையின் வினியோக சங்கிலியின் நிலைதன்மைக்கு இது கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இதனால், இந்த பாகுபாடு எதிர்ப்பு விசாரணை மேற்கொள்வதாக சீனா தீர்மானித்து, எதார்த்தமான நிலைமைக்கு இணங்க அதற்கேற்றவாறு நடவடிக்கைகள் மேற்கொள்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.