குஜராத் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற துவாரகா கோயிலுக்கு செல்லும் வகையில், கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலமான சுதர்சன் சேது பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
குஜராத் மாநிலம் ஓகா துறைமுகத்திற்கு அருகில் உள்ளது பேய்ட் துவாரகா தீவு. இது துவாரகா நகரத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ளது. அங்கு புகழ்பெற்ற கிருஷ்ணர் துவாரகாதீஷ் கோவில் அமைந்துள்ளது.
தற்போது,பெய்ட் துவாரகாவில் உள்ள கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் படகு மூலம் பகலில் மட்டுமே பயணிக்க முடியும்.
இந்நிலையில், இந்த கோயிலுக்கு எந்த நேரமும் பக்தர்கள் செல்லும் வகையில், பெய்ட் துவாரகா தீவை ஓகாவுடன் இணைக்கும் வகையில், அரபிக்கடலில் 2.32 கிமீ நீளமுள்ள நாட்டின் மிக நீளமான கேபிள் பாலம் கட்டப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலை கொண்ட 27.20 மீட்டர் அகல பாலத்தில் இருபுறமும் 2.50 மீட்டர் அகல நடைபாதைகள் உள்ளன. சுமார் 979 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
ஸ்ரீமத் பகவத் கீதையின் வசனங்கள் மற்றும் இருபுறமும் கிருஷ்ணரின் உருவங்களுடன் நடைபாதை அலங்கரிக்கப்பட்டுள்ளது. ‘சிக்னேச்சர் பாலம்’ என்று அழைக்கப்பட்ட இந்த பாலம், ‘சுதர்சன் சேது’ அல்லது சுதர்சன் பாலம் என மறுபெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.