தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட
பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40 ஐ எட்டியுள்ளது. மேலும், அந்நாட்டு அரசாங்கம் ஒரு நாள் துக்கத்தை அறிவித்துள்ளது என்று ஈரானின் ஐஆர்ஐபி செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
தீ விபத்தில் சிக்கி 1,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், அவர்களில் 197 பேர்ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹோர்மோஸ்கானின் ஆளுநர் கூறியுள்ளார். பந்தர் அப்பாஸ் துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் யார்டில் கெமிக்கல் பொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததே வெடி விபத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவலாக கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் உத்தரவிட்டுள்ளார். விபத்துக்குப் பிறகு, இந்த சம்பவத்தின் காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன, அதில் வானத்தில் ஒரு பெரிய கரும்புகை மேகம் எழுவதைக் காணலாம்.
வெடிவிபத்தை தொடர்ந்து, ஈரானின் சுங்க ஆணையம் அனைத்து சுங்க அலுவலகங்களுக்கும் துறைமுகத்திற்கு ஏற்றுமதி மற்றும் போக்குவரத்து சரக்குகளை அனுப்புவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை அமலில் இருக்கும். ஈரான் – அமெரிக்கா, ஓமனில் மூன்றாவது சுற்று அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடத்தி வரும் நேரத்தில் பந்தர் அப்பாஸில் வெடிவிபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.