இந்தியாவை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றுவோம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய ஜவுளி வர்த்தக அமைச்சகம் சார்பில், ‘பாரத் டெக்ஸ் – 2024 கண்காட்சி’இன்று (பிப்.,26) முதல் மார்ச் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை பிரதமர் மோடி திறந்து வைத்து உரையாற்றினார்.
அப்போது, பாரதத்தை உலகளாவிய ஏற்றுமதி மையமாக மாற்றுவோம் என்பதில் எங்களுக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், Vocal for Local என்பதற்கு மற்றொரு புதிய பரிமாணத்தைச் சேர்த்துள்ளோம். இன்று, Local to Global என்ற பொது இயக்கம் நடந்து வருகிறது.
அடுத்த 25 ஆண்டுகளில் பாரதத்தை ‘விக்சித் ராஷ்டிரா’வாக மாற்ற தீர்மானித்துள்ளோம். விக்சித் பாரதத்தின் நான்கு முக்கிய தூண்கள் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள். மேலும் குறிப்பாக, பாரதத்தின் ஜவுளித் துறை இந்த அனைத்துத் தூண்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.
அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகள் இந்தியாவின் ஜவுளித் துறையில் அன்னிய முதலீடுகளை அதிகரிக்க செய்வதாக பிரதமர் கூறினார். ஜவுளித் துறையில் 2014-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த அந்நிய நேரடி முதலீடு இன்று இரட்டிப்பாகியுள்ளது. ஜவுளித் துறையை கட்டியெழுப்புவதில் அரசு எடுத்துள்ள முயற்சிகளை எடுத்துரைத்த அவர், தரக் கட்டுப்பாட்டில் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.
ஜவுளித் துறையில் நிலையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசாங்கத்தின் முயற்சியால் ஏற்பட்ட நேர்மறையான தாக்கங்களை நன்றாகக் காணலாம். 2014ல், இந்திய ஜவுளிச் சந்தையின் மதிப்பீடு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது. இன்று, 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது என பிரதமர் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில், நூல், துணி, மற்றும் ஆடை உற்பத்தி 25 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜவுளித் துறையில் தரக் கட்டுப்பாட்டில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்துகிறது.தொழில்துறையில் பெண் தொழிலாளர்களை வலுப்படுத்துவதில் காதி எவ்வாறு பங்கு வகித்தது என்பதை பிரதமர் மோடி விவரித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் காதியை வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய இரண்டிற்கும் வழிவகை செய்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று, பருத்தி, சணல் மற்றும் பட்டு உற்பத்தியில் உலகிலேயே அதிக உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும், லட்சக்கணக்கான விவசாயிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று அரசாங்கம் லட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளுக்கு ஆதரவளிக்கிறது, அவர்களிடமிருந்து லட்சக்கணக்கான குவிண்டால் பருத்தியை கொள்முதல் செய்கிறது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கஸ்தூரி பருத்தி இந்தியாவின் சொந்த அடையாளத்தை உருவாக்குவதற்கான ஒரு பெரிய படியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார்.