இராஜபதி கைலாசநாதர் கோயில் என்பது தூத்துக்குடி மாவட்டம் இராஜபதி ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும்.
திருநெல்வேலி – திருச்செந்தூர் செல்லும் வழியில் குறும்பூர் அருகில் இத்திருத்தலம் உள்ளது. இச்சிவாலயம் நவகைலாயங்களில் ஒன்றாகவும், கேது தலமாகவும் போற்றப்படுகிறது.
இக்கோயில் இருக்கும் இடத்தில் ஒழுங்கற்ற வடிவில் ஒரு இலிங்கம் மட்டுமே இருக்கிறது. அம்பாள், பரிவார தெய்வங்கள் யாரும் இல்லை. இங்குள்ள இலிங்கத்தின் நான்கு புறங்களிலும் 4 சக்கர வடிவங்கள் இருக்கிறது.
லிங்கத்திற்கு கீழே புதைந்து போன கோயில் இருப்பதாக சொல்கிறார்கள். இத்தலம் பற்றி தெரிந்த பக்தர்கள் மட்டும் இங்கு வருகின்றனர். பக்தர்கள் இந்த இலிங்கத்தை வழிபட்டு, அருகிலுள்ள மண்ணை பிரசாதமாக எடுத்துச் செல்கின்றனர்.
நவ கைலாயத்தில் இது கேது வணங்கிய ஸ்தலம். ஜாதகத்தில் கேது திசை நடப்பவர்களும், கேதுவின் ஆதிக்கத்தில், உள்ளவர்களும், கேது ஸ்தலமான, காளகஸ்திக்கு நிகரான இராஜபதியில் வழிபடுவது சிறப்பு. ஜாதகரீதியாக கேது தோஷம் உள்ளவர்கள் இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
ஞானகாரகனான கேதுவின் அம்சமாக இத்தலத்தில் சிவன் அருளுவதால் இவரிடம் வேண்டிக்கொள்ள அறிவான குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை.
தமிழகத்திலேயே வேறெங்கும் இல்லாத வகையில் நவக்கிரக தோஷ நிவர்த்திக்கு பக்தர்கள் தங்கள் கைகளாலேயே அபிஷேகம் தீப ஆராதனை வில்வ அர்ச்சனை வழிபாடு செய்து பரிகாரம் செய்யும் தலம் ராஜபதி அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயிலில் மட்டுமே.
சிவனடியார்கள், சிவபக்தர்கள் மூலம் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் வேறெங்கும் காணக்கிடைக்காத நவலிங்கங்கள் சந்நிதி உள்ளது.
விநாயகர், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், நடராஜர், சிவகாமி, தட்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை உடனுறை முருகன் ஆகிய சன்னதிகள் உள்ளன.