‘கலைஞரின் மனசாட்சி’யுடன் சில தருணங்கள்!

Estimated read time 0 min read

‘கலைஞரின் மனசாட்சி’ என்று தான் அப்போது பலரும் அழைத்துக் கொண்டிருந்தார்கள் கலைஞரின் மருமகனான முரசொலி மாறனை.

திராவிட இயக்க வரலாற்றை எந்த அளவுக்கு அவர் உள்வாங்கியிருந்தார் என்பதற்கான அடையாளங்களில் ஒன்று அவர் எழுதிய ‘மாநில சுயாட்சி’ நூல். வெளிப்படைத் தன்மை அவருடைய இயல்பாக இருந்தது.

தொண்ணூறுகளில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் முரசொலி, குங்குமம் அலுவலகங்கள் இருந்த நேரம். மூத்த நண்பரான சின்னக்குத்தூசி அப்போது முரசொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மதுரையில் ‘அகிலா நியூஸ்’ என்கிற செய்தி நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்த நான், சென்னை செல்லும்போது முரசொலி அலுவலகத்திற்கு சின்னக்குத்தூசியைப் பார்க்கப் போவேன்.

ஒரு சமயம் போனபோது, “வாங்க.. கீழே மாறன் வந்திருக்கார்.. உங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். குங்குமத்திற்கு நீங்க எழுதலாம்லே..” என்றவர்,

என்னை முரசொலி மாறனின் அறைக்கு அழைத்துச் சென்றார். அவரிடம் சுருக்கமாக அறிமுகப்படுத்தினார்.

“நீங்க பேசிக்கிட்டிருங்க” – சொல்லிவிட்டுச் சென்று விட்டார் சின்னக்குத்தூசி.

என்னைப் பற்றி விசாரித்த மாறன் ‘குங்கும’த்திற்கு எழுதச் சொன்னார்.

அப்போது குங்குமத்தில் மீண்டும் வந்து ஆசிரியராக இருந்த சாவி வெளிநாட்டுக்குச் சென்றிருந்தார்.

பொறுப்பாசிரியராக இருந்த கவிஞர் சுகுமாறன் தான் குங்குமத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

“நம்ம தியாகராஜன் (சின்னக் குத்தூசி) இப்படி யாரையும் என்கிட்டே வந்து இப்படி அறிமுகப்படுத்தினதில்லே.. அதனாலே நீங்க மதுரைக்குப் போனதும் எங்களுக்கு அனுப்புங்க.. பார்ப்போம்” – அனுப்பிவைத்தார் மாறன்.

மதுரைக்குப் போனதும் – அப்போது சபாநாயகராக இருந்த சேடபட்டி முத்தையாவின் தொகுதியில் ஒரு கோவில் திருவிழாவில் தான் அந்தத் திகிலூட்டும் சடங்குகள் நடந்தன.

கோவிலுக்குத் தங்கள் குழந்தைகளுக்காக வேண்டிக் கொண்ட பெற்றோர்கள் திருவிழாவின் போது, வினோத சடங்கு ஒன்றைச் செய்தார்கள்.

கோவிலுக்கு முன்னால் உள்ள மணல் பரப்பில் குழி தோண்டி குழந்தைகளை அதற்குள் இறக்கி மண்ணைப் போட்டு மூடிவிட்டுச் சில நிமிடங்கள் கழித்து அவர்களைத் தூக்கி நேர்த்திக்கடனைக் கழிப்பார்கள்.

அங்கு போய் நேரடியாக அந்தச் சடங்களைப் பார்த்தபோது திகிலாக இருந்தது. பல குழந்தைகளை மண்ணில் புதைக்கும்போது வீறிட்டு அழுதன பல குழந்தைகள். சில குழந்தைகள் மயக்கம் அடைந்தன.

குழந்தையின் முகத்தில் துணி சுற்றப்பட்டிருந்தாலும் அருகில் இருந்து அந்தக் காட்சிகளை நான் புகைப்படம் எடுத்தபோது மனதுக்கு உறுத்தலாக இருந்தது. ஆனால், அங்கு திருவிழாவின் இயல்புமான ஒரு பகுதியாக அதிர்ச்சியூட்டும் இந்தச் சடங்கு முறை இருந்தது.

வீடு திரும்பியதும் கட்டுரையை எழுதி முடித்து ‘குங்குமம்’ சுகுமாறனைத் தொலைபேசியில் அழைத்துச் சொன்னபோது, உடனே கட்டுரையைப் படங்களுடன் அனுப்பச் சொன்னார். அனுப்பியதும் ஒரிரு நாட்கள் கழித்து அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.

“மாறன் சார் உங்க கட்டுரையைப் பார்த்துட்டார். அட்டைப் படத்தில் தலைப்பை வைச்சுப் போடச் சொல்லியிருக்கார்.”

அந்த வார குங்குமம் இதழுக்கான வேலைகள் முடிய இருக்கும் நிலையில் வெளிநாட்டிலிருந்து திரும்பிவிட்டார் ஆசிரியரான சாவி.

வந்ததும் அந்த வாரத்தில் வெளியாவதற்காக வைத்திருந்தவற்றைப் பார்த்திருக்கிறார்.

நான் அனுப்பியிருந்த கட்டுரையையும் பார்த்தவர், “என்ன இது..” என்று குறிப்பிட்ட ஒரு பத்திரிகையின் பெயரைச் சொல்லி, “அதில் போடுற மாதிரில்லே இருக்கு.. இது வெளியாக வேண்டாம்.. விட்டுருங்க” – சொல்லிவிட்டுப் போய் விட்டார் சாவி.

அந்த விஷயம் முரசொலி மாறனின் கவனத்திற்குப் போயிருக்கிறது.

“எப்படியும் அந்தக் கட்டுரையைப் போடுருங்க.. நான் சொன்னபடி அட்டையிலும் குறிப்பு வைச்சுருங்க”

மாறன் சொன்னபடியே அந்த வார ‘குங்குமம்’ இதழில் என்னுடைய கட்டுரை வெளியாகி இருந்தது. அட்டைப்படக் குறிப்புடன்.

மறுநாள் நடந்த நிகழ்வு – எனக்கு அதிர்வூட்டியது.

இதழ் வெளியான மறுநாள் குங்குமம் அலுவலகத்திற்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியிருந்தார் ஆசிரியராக இருந்த சாவி அவர்கள்.

***

தி.மு.க.வின் மாநில மாநாடு நடக்க இருந்த சமயம்.

பிரபல வார இதழுக்காக மத்திய அமைச்சராக இருந்த முரசொலி மாறனைப் பேட்டி எடுக்கப் போயிருந்தேன். வீட்டிற்கு முன்னால் சிலர் காத்திருந்தார்கள்.

மிகச் சரியாக ஒரு மணி நேரம் தான் என்று என்னிடம் சொல்லப்பட்டிருந்தது.

என்னுடைய இரண்டு நூல்களை அவரிடம் கொடுத்துவிட்டுத் துவங்கிய பேட்டி, அவர் குறிப்பிட்ட ஒரு மணி நேரம் தாண்டிப் போய்க் கொண்டிருந்தது.

சில கேள்விகள் அவரை விரிவான பதிலைச் சொல்ல அவரை ஆயத்தப்படுத்தியிருந்தன. அவருடைய உதவியாளரான கௌதமை அழைத்தார்.

“வெளியே காத்திருக்கிவர்களை எல்லாம் போகச் சொல்லியிருங்க.. நாளைக்குப் பார்க்கலாம். பேட்டி முடிகிற வரை யாரும் வர வேணாம்”.

அதன் பிறகு பேட்டி தொடர்ந்து மூன்றரை மணி நேரம் வரை நீடித்தது.

அவரிடம் கேட்ட ஒரு கேள்வியை மிகவும் ரசித்தவர் அதற்கு உணர்வு வயப்பட்ட நிலையில் விரிவாகப் பதில் சொன்னார்.

பேட்டி முடிந்து நான் அலுவலகத்திற்குப் போன நிலையிலும், தொலைபேசியில் இரண்டு முறை அழைத்துச் சில திருத்தங்களைச் சொன்னார் மாறன்.

மூன்று நாட்களில் வார இதழில் அவருடைய பேட்டி வெளியானது.

வெளியான அன்று காலை வீட்டில் உள்ள தொலைபேசிக்கு அழைத்தார் மாறன்.

“பேட்டியைப் போட்டிருக்கீங்க.. ஆனால் நீங்க கேட்ட எந்தக் கேள்வியை ரசிச்சு நான் பதில் சொன்னேனோ, அந்தக் கேள்வியும், பதிலும் வரலையே” – கேட்டதும் பேட்டியின் நீளம் கருதி ஆசிரியரால் குறைக்கப்பட்டிருக்கலாம் என்பதை நிதானமாகச் சொன்னேன்.

கேட்டுக் கொண்டிருந்த அவர் சற்று இடைவெளி விட்டு, “பத்திரிகைகளில் இதெல்லாம் சாதாரணங்கிறது எனக்கும் தெரியும்.

நான் உங்களைக் கோவிச்சிக்க மாட்டேன். இருந்தாலும் உங்களுக்குக் கொடுத்த பதில் என் மனசிலேயே இருக்கு.. ரெண்டு நாளில் உங்களைத் திரும்பவும் கூப்பிடுறேன்.”

சொன்னபடியே இரண்டு நாட்களில் அவரிடம் இருந்து அழைப்பு.

உற்சாகமாகப் பேசினார்.

“நாளைக்கு தி.மு.க மாநாடு நடக்குது.. தெரியும்லே.. அந்த மாநாட்டுத் தீர்மானங்களைத் தயார் பண்ணிட்டோம். அதிலே உங்களுக்குச் சொன்ன பதிலை ஒரு தீர்மானமாகச் சேர்த்துட்டேன்”

மறுநாள் மாநாட்டுத் தீர்மானத்தைப் பார்த்தபோது, பேட்டியில் அவர் என்னிடம் சொன்ன பதிலில் இருந்த வாசகங்கள் தீர்மானத்தின் ஒரு பகுதியாக மாறியிருந்தன.

***

மாறன் மத்திய அமைச்சராக இருந்த சமயம். கலைஞர் கைது செய்யப்பட்ட அன்று சபாரி சட்டையும், வேட்டியும் அணிந்திருந்த மாறனை சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்துப் பார்த்தது தான் கடைசியாக நிகழ்ந்த சந்திப்பு.

மத்திய அமைச்சர் ஒருவரை இப்படியும் நடத்த முடியுமா? – நிகழ்த்திக் காட்டியிருந்தது தமிழகக் காவல்துறை.

அவர் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி போலீசாரால் தூக்கி வரப்பட்டபோது, காவல் நிலைய இரும்புக் கதவுக்கு முன்னால் திகிலுடன் அந்தக் காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த சில சாட்சிகளில் நானும் ஒருவன்.

மனைவி, மகளோடு காவல் நிலையத்தை விட்டு அதிகாலை நேரத்தில் வெளிவந்தபோது கசங்கிப் போயிருந்தார்.

வார்த்தைகள் மிகுந்த பதற்றத்துடன் அரைகுறையாக வெளிவந்தன.

அவரை நிலைகுலைய வைத்திருந்தது தாக்குதலின் வீர்யம்.

மூன்று முறை மத்திய அமைச்சராக இருந்து, நீண்டகாலம் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த அவர் காவல் நிலையத்திலிருந்து ரணப்பட்ட நிலையில் வெளிவந்த போது, ஒரு ஆட்டோவைப் பிடித்து வீட்டுக்கு அனுப்பினோம்.

அவ்வளவு சிரமத்திற்கு இடையிலும் சொன்னார். – “பார்ப்போம்ப்பா”

அதன் பிறகு தொடர்ந்து உடல்நலப் பிரச்சினைகள் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்துச் சிகிச்சைகள் பலனின்றி 2003 ஆம் ஆண்டு அவர் மறைந்தபோது, உடைந்து போனார், “கண்ணின் கருவிழி” என்று அவரை அழைத்த கலைஞர்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் மாறன் மீது அவர் கொண்டிருந்த அளப்பரிய அன்பின் ஈரம் தெரிந்தது.

”கலைஞரின் மனசாட்சி” என்று தி.மு.க.வினர் மாறனைச் சொன்னது மிகையில்லை.

Please follow and like us:

You May Also Like

More From Author