குடும்ப ஒற்றுமையை பலப்படுத்தும் கேதார கௌரி விரதம்..!

Estimated read time 1 min read

கேதார கௌரி விரதம்.

இந்த விரதம் மொத்தம் 21 நாட்கள் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி திதி தொடங்கி, ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் அமாவாசை வரை 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் அனுஷ்டிக்கிறார்கள். கன்னி பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும், திருமணமான பெண்கள் குடும்ப ஒற்றுமை, கணவர் நலம் வேண்டியும் இந்த விரதத்தை இருப்பார்கள்.

கயிலாய மலையில் வீற்றிருக்கும் சிவனையும், பார்வதி தேவியையும் அங்கு வரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும் வணங்கி செல்வது வழக்கம். அவர்களில் ஒருவரான பிருங்கி முனிவர் தீவிரமான சிவ பக்தர். இவர் சிவபெருமானை தவிர வேறு எந்த கடவுளையும் வணங்க மாட்டார்.

ஒரு முறை பிருங்கி முனிவர் சிவபெருமானை வழிபட வேண்டி கயிலாய மலைக்கு வந்தார். அப்போது சிவனும், பார்வதி தேவியும் சேர்ந்து காட்சியளித்தனர். இருப்பினும், பிருங்கி முனிவர் வண்டு உருவம் எடுத்து, இருவருக்கு இடையே சுற்றி சிவபெருமானை மட்டும் வழிபட்டார். இதனால் மிகுந்த கோபம் கொண்ட பார்வதி தேவி பிருங்கி முனிவரிடம், “உன் உடலுக்கு தேவையான சக்தி அனைத்தையும் நானே தருகிறேன். ஆனால் நீ என்னை வழிபட மறுக்கிறாய். என்னை வழிபடாத உனக்கு என்னுடைய சக்தி மட்டும் எதற்கு. அதனால் சக்திக்கு தேவையான ரத்தம், நரம்பு, சதை போன்றவற்றை திருப்பிக் கொடுத்துவிடு” என்றார்.

உடனே சிறிதும் யோசிக்காத பிருங்கி முனிவர், தன் உடலில் இருந்த சக்தி அனைத்தையும் பார்வதி தேவி கேட்டபடியே கொடுத்தார். இதனால் வலுவிழந்த அவர் எலும்பும், தோலுமாக காட்சியளித்தார். அவர் நிற்க முடியாமல் கீழே விழ நிலைதடுமாறினார். இதைக் கண்ட சிவபெருமான் மனமிரங்கி பிருங்கி முனிவருக்கு கைத்தடி ஒன்றை வழங்கி அருளினார். இதனால் கோபம் கொண்ட பார்வதி தேவி, “என்னை மதிக்காத பிருங்கி முனிவருக்கு நீங்கள் உதவி செய்யலாமா” என்று கயிலாயத்தை விட்டு வெளியேறினார்.

பின்பு, பூலோகம் வந்த பார்வதி தேவி, பல வருடங்களாக மழையின்றி வறண்டு காணப்பட்ட நந்தவனத்துக்கு சென்றார். பாலை வனம் போல காட்சியளித்த அந்த இடம், பார்வதி தேவி வந்ததும் பூக்கள் பூத்து சோலைவனமாக மாறியது. அப்போது அங்கு வந்த வால்மீகி முனிவர், பார்வதி தேவியை தன்னுடைய ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்.

பின்பு, வால்மீகி முனிவர் பார்வதி தேவியிடம் “தாயே, தாங்கள் வந்ததன் நோக்கம் என்ன” என்று கேட்டார். பார்வதி தேவி “நான் மீண்டும் ஈசனுடன் சேர வேண்டும். அதற்கான வழி இருந்தால் கூறுங்கள்” என்றார். இதையடுத்து பல சாஸ்திரங்களை அலசி ஆராய்ந்த முனிவர், “அனைத்து விரதங்களிலும் மேலான ஒரு விரதம் உள்ளது. அந்த விரதத்தை கடைப்பிடித்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும்” என்றார். பின்பு, ‘கேதாரீஸ்வரர் நோன்பு’ என்ற விரதத்தை பார்வதி தேவிக்கு விளக்கி கூறினார்.

முனிவர் கூறியபடி, பார்வதி அந்த விரதத்தை தவறாது கடைப்பிடித்து வந்தார். இவ்வாறு விரதத்தை கடைப் பிடித்த 21-வது நாள் தேவ கணங்கள் சூழ சிவபெருமான் பார்வதி தேவிக்கு காட்சி கொடுத்தார். அதன்பின்பு சிவபெருமான், தன்னுடைய இடப்பாகத்தை பார்வதி தேவிக்கு அளித்து, அர்த்தநாரீஸ்வரராக கயிலாயத்துக்கு திரும்பினார். இவ்வாறு பார்வதி தேவி கடைப்பிடித்த விரதம் என்பதால் இவ்விரதம் ‘கேதார கௌரி விரதம்’ எனப் பெயர் பெற்றது.

கேதார கௌரி விரதத்தை வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளலாம். சிவனின் அருளையும், அம்பிகையின் அருளையும் ஒரு சேர பெற வைக்கும் மிக அற்புதமான விரதம் இதுவாகும்.

கேதார கௌரி விரதம் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் சுக்ல பட்ச தசமி திதியில் தொடங்குகிறது. விரதம் இருப்பவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து, வீட்டை சுத்தம் செய்து சிவபெருமானை பூஜிக்கவேண்டும்.

விரதம் தொடங்கும் நாளில், கலசத்தை 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் சுற்றி அமைத்து, அதை சிவ-பார்வதியாக வழிபடுவர். பார்வதி தேவி 21 நாட்கள் விரதம் இருந்ததால் பூஜையின்போது 21 என்ற எண்ணிக்கையில் பழம், பாக்கு, வெற்றிலை, பூஜை பொருட்கள் படைத்து வழிபடலாம். விரதம் முடியும் நாளில் நோன்பு கயிற்றை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக்கொள்வர். பின்பு, 21 வகையான காய் கறிகளால் உணவு சமைத்து உறவினருக்கு கொடுத்து விரதத்தை முடிப்பர்.

கேதார கௌரி விரதமானது பாரம்பரியமாக 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். ஆனாலும், உடல்நிலை மற்றும் சூழ்நிலையைப் பொறுத்து, பலர் இப்போது ஒரு நாள் மட்டும், அதாவது, விரதம் நிறைவு செய்யும் நாளான அமாவாசை அன்று மட்டும் விரதம் இருந்து சிவ-பார்வதியை வழிபடுகிறார்கள்.

அவ்வகையில் இந்த ஆண்டு ஒரு நாள் மட்டும் விரதம் இருப்பவர்கள், அக்டோபர் 21-ம் தேதி (21-10-2025) விரதம் மேற்கொள்ளலாம். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினமான 20-10-2025 அன்று மாலையில் தொடங்கி மறுநாள் (21-10-2025) மாலை வரை அமாவாசை திதி உள்ளது. எனவே, பெரும்பாலான மக்கள் தீபாவளி அன்று (20-10-2025) அன்று விரதம் மேற்கொள்வார்கள். ஒரு நாள் மட்டுமே விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் பூஜை முடியும் வரை எதுவும் சாப்பிட மாட்டார்கள். திரவ உணவுகள் கூட எடுத்துக்கொள்ள மாட்டார்கள். தொடர் விரதம் இருப்பவர்கள் ஒருவேளை உணவு மட்டும் எடுத்துக்கொண்டு மற்ற இரண்டு வேளையும் திரவ உணவுகளை உட்கொள்வது வழக்கம். உடல் சூழ்நிலை நன்றாக இருக்கும் பட்சத்தில் மூன்று வேளையும் திரவ உணவுகளை மட்டும் எடுத்துக் கொண்டும் இருப்பார்கள்.

Please follow and like us:

You May Also Like

More From Author