நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு இவ்வாண்டில் கிட்டத்தட்ட 5 சதவீதம் அதிகரிக்க சீனா இலக்கிட்டுள்ளது.
செவ்வாய்கிழமை காலையில் பெய்ஜிங்கில் நடைபெற்ற தேசிய மக்கள் பேரையின் ஆண்டுக் கூட்டத் தொடரில் சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் அரசுப் பணியறிக்கையை வழங்கியபோது இதைத் தெரிவித்தார்.
மேலும், இவ்வாண்டில் நுகர்வோர் விலைவாசிக் குறியீடு 3 சதவீதம் உயர்வது, தானிய உற்பத்தி 65000 கோடி கிலோகிராமை எட்டுவது உள்ளிட்ட பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கான இலக்குகள் இந்த பணியறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டில், சீனப் பொருளாதாரம் 5.2 விழுக்காடு வளர்ச்சியை அடைந்து, மொத்த உள்நாட்டு உற்பத்தி 126 லட்சம் கோடி யுவானை எட்டியுள்ளதோடு, நுகர்வோர் விலைவாசிக் குறியீடு 0.2 விழுக்காடு உயர்ந்துள்ளது என்று லீச்சியாங் பணியறிக்கையில் தெரிவித்தார்.
நவீனமயமான தொழில் அமைப்புமுறையை உருவாக்குவதை முன்னெடுத்து, புதிய தரமான உற்பத்தித்திறனை வளர்ப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்றும், தொழில் சங்கிலி மற்றும் விநியோகச் சங்கிலியின் மேம்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்றும் அரசுப் பணியறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளது.
என்.பி.சி. என பொதுவாக அறியப்படும் தேசிய மக்கள் பேரவை, சீனாவின் அதியுயர் அதிகாரம் கொண்ட அமைப்பாகும். 5 ஆண்டுக்காலப் பதவிக்காலம் கொண்ட இந்த பேரவை, ஆண்டுதோறும் கூட்டத் தொடரை நடத்துகின்றது.
சுமார் ஒரு வாரம் நீடிக்கும் இந்த கூட்டத் தொடரில், தேசிய மக்கள் பேரவையின் பிரதிநிதிகள், அரசுப் பணியறிக்கையை பரிசீலனை செய்து, கடந்த ஆண்டில் பணிச் சாதனைகளை தொகுத்து புதிய ஆண்டில் தேசிய வளர்ச்சி திட்டத்தை வரைகின்றனர்.