பீகார் : சட்டமன்றத் தேர்தல் 2025-இல் NDA கூட்டணி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் நிதீஷ் குமார் மனமுருகிய நன்றியைத் தெரிவித்துள்ளார். “மாநில மக்கள் எங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்காக அனைத்து மரியாதைக்குரிய வாக்காளர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெற்றி, நிதீஷ் குமாரின் 10வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பதை உறுதிப்படுத்தியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவிற்கு நிதீஷ் குமார் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துள்ளார். “மரியாதைக்குரிய பிரதமர் திரு. நரேந்திர மோடியின் ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் கூறினார். NDA-வின் “டபுள் இன்ஜின்” அரசு, பீகாரின் வளர்ச்சி, பெண்கள் இட ஒதுக்கீடு, குற்ற ஒழிப்பு ஆகியவற்றை மக்கள் ஏற்றுக்கொண்டதாக அவர் வலியுறுத்தினார்.
மேலும், NDA கூட்டணியின் ஒற்றுமையைப் பாராட்டிய நிதீஷ் குமார், கூட்டாளிகளுக்கு நன்றி தெரிவித்தார். “இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்தி, பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. ஸ்ரீ சிராக் பாஸ்வான், ஸ்ரீ ஜிதன் ராம் மஞ்சி, ஸ்ரீ உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு நன்றி” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கூட்டணி ஒற்றுமை, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறக் காரணமாக அமைந்தது.”உங்கள் ஆதரவுடன், பீகார் மேலும் முன்னேறும், நாட்டின் மிகவும் வளர்ந்த மாநிலங்களில் ஒன்றாக சேர்க்கப்படும்” என்று நிதீஷ் குமார் உறுதியளித்தார். இந்த வெற்றி, பீகாரின் வளர்ச்சி பயணத்தைத் தொடரும் என்றும், சமூகநீதி மற்றும் நல்லாட்சி முன்னெடுக்கப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
