‘ராம் பிரஹார்’ போர்ப் பயிற்சி : “கொடுமையான விளைவுகள்” பாக்.,கிற்கு இந்தியா எச்சரிக்கை!

Estimated read time 0 min read

இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயற்சித்தால், ஆப்ரேஷன் சிந்தூரை விடக் கொடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று பாகிஸ்தானை மீண்டும் இந்தியா எச்சரித்துள்ளது. அதுபற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில் தேசப் பாதுகாப்புக்கான தீவிர பயிற்சிகளில் இந்திய முப்படைகளும் ஈடுபட்டுவருகின்றன. சமீபத்தில், ஹரித்வாருக்கு அருகில் ஜில்மில் ஜீல் ரிசர்வ் வனப்பகுதியில் உள்ள துதலா தயாள்வாலாவில், ராணுவத்தின் மேற்கு கட்டளைப் பிரிவால் “ராம் பிரஹார்” என்ற பெயரில் இராணுவப் பயிற்சி நடைபெற்றது.

நான்கு வாரங்கள் நீடித்த இந்தப் பயிற்சியில், தனது முழுப் பலத்தையும் இந்திய இராணுவம் நிரூபித்தது. கரடுமுரடான இமயமலை நிலப்பரப்பின் உயரமான இடங்களில் போர் நிலைமைகளை எதிர்த்துத் தாக்கும் ஆற்றலை வெளிப்படுத்திய இந்தப் போர்ப் பயிற்சியின் நோக்கம், இராணுவத்தின் புதிய வியூகங்கள், தொழில்நுட்பத் திறன்கள் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறங்களையும் மேம்படுத்துவது ஆகும்.

இந்தப் பன்முகப் போர்ப் பயிற்சியில் மலைப் போர்ப் பிரிவுகள், சிறப்புப் படைகள், பீரங்கிபடைகள், ராணுவத்துக்கான போர் விமானங்கள், உளவு பிரிவுகள் மற்றும் தகவல் தொடர்புப் பிரிவுகள் ஆகியவை பங்கேற்றன.

பாகிஸ்தானுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும், இந்தப் பகுதி, செனாப், ரவி, சட்லெஜ் உள்ளிட்ட ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. எனவே, ஆறுகளிலும் சமவெளிகளிலும் பீரங்கிகள் சென்று தாக்குவது தொடங்கி அப்பாச்சி மற்றும் ருத்ரா போன்ற ஹெலிகாப்டர்கள் வானிலிருந்து இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி அழிப்பது என இராணுவத்தினர் தீவிரப் போர்ப் பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

மேற்கு கட்டளை பிரிவின் உள்ள ஒவ்வொரு ஆயுத அமைப்புகளும், ஒவ்வொரு வியூகத் திட்டங்களும் ஒவ்வொரு அதிநவீன தொழில்நுட்பங்களும் இந்தப் போர்ப் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆப்ரேஷன் சிந்தூரில் மிகப்பெரிய சேதத்தையும் இழப்பையும் சந்தித்த பாகிஸ்தான் மீண்டும் ஏதாவது தாக்குதலுக்கு முயற்சி செய்தால், இந்த முறை இந்தியாவின் தாக்குதல் முன்பை விட மிகவும் கடுமையானதாக இருக்கும் என்று மேற்கு கட்டளைப் பிரிவின் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் குமார் கட்டியார் எச்சரித்துள்ளார்.

மேலும் செயல்பாட்டு சுறுசுறுப்பு, பல்வேறு களத் திறன் மற்றும் நிலம், வான் மற்றும் சைபர் செயல்தளங்களில் நிகழ்நேர முடிவெடுப்பதில் இராணுவத்தின் திறன் ஆகியவற்றை வெளிப்படுத்திய ராம் பிரஹார் போர்ப் பயிற்சி, ஆக்ரோஷமான பதிலடிக்கான தயாரிப்பு தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author