அதிசய சிவாலயம்… தினமும் ஐந்து முறை நிறம் மாறும் அதிசய லிங்கம்..!

Estimated read time 1 min read

நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் எனப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் வேறு எந்த சிவன் கோவிலிலும் இல்லாத தனிச் சிறப்பாக ஜடாரி சேவை பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. சிவ பெருமானின் பாதங்களே பக்தர்களின் தலைமீது பதித்து, ஆசி வழங்குவதாக ஐதீகம். பாவங்களை போக்கி, திருமண வரம் தரும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது.

எத்தனையோ விதமான அதிசயம் நிறைந்த கோவில்களை பற்றி நாம் கேள்விப்படிருப்போம். அப்படி பல அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் அற்புதங்களைக் கொண்ட கோவில் தான் இந்த சிவன் கோவில். ஒரு நாளைக்கு 5 முறை, அதாவது இரண்டரை மணி நேரத்திற்கு ஒரு முறை என தன்னுடைய நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கும் சிவலிங்கம், ஒரே கருவறையில் இரண்டு சிவலிங்கங்கள், மும்மூர்த்திகள் ஒரே கருவறையில் காட்சி தருவது, பக்தர்களுக்கு ஜடாரி சேவை வழங்குவது என பல ஆச்சரியங்களை கொண்ட உலகின் ஒரே சிவன் கோவில் இது தான். இந்த கோவில் வேற எங்கும் கிடையாது. தமிழகத்தின் ஆன்மிக நகரமான கும்பகோணத்தில் இருந்து 13 கி.மீ., தொலைவில் நல்லூர் என்ற ஊரில் அமைந்துள்ளது.

நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வர் கோவில் என பக்தர்களால் அழைக்கப்படும் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் தான் இத்தனை சிறப்புகளும் காணப்படுகிறது. கைலாயத்தில் சிவ பெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது. இதை காண அனைத்து தெய்வங்களும் ஒரே இடத்தில் கூடியதால் பாரம் தாங்க முடியாமல் பூமி சமநிலையை இழந்தது. இதனால் பூமியை சமநிலைப்படுத்த அகத்திய முனிவரை தென் திசை நோக்கி செல்லும் படி சிவ பெருமான் ஆணையிட்டார். சிவ-பார்வதி திருமணத்தை காண வேண்டும் என்ற விருப்பத்தை தியாகம் செய்து, சிவனின் கட்டளைப்படி, தென்திசை நோக்கி சென்றார் அகத்தியர். கும்பகோணம் அருகில் உள்ள நல்லூர் தலத்தில் சுயம்பு லிங்கம் இருப்பதை கண்ட அகத்தியர், அதற்கு அருகில் தானும் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டார். அவருக்கு இந்த தலத்தில் திருமண கோலத்திலேயே சிவனும், பார்வதியும் காட்சி அளித்தனர்.

இக்கோவிலின் கருவறையில் இரண்டு லிங்கங்களுக்கு பின்னால் சுதை சிற்பமாக சிவனும் – பார்வதியும் திருமண கோலத்தில் காட்சி அளிப்பதை தரிசிக்க முடியும். அது மட்டுமல்ல இதே கருவறையில் வலது புறம் பிரம்மாவும், இடது புறம் விஷ்ணுவும் சிவ-பார்வதியை வணங்கிய நிலையில் காட்சி தருவதையும் இந்த கோவிலில் மட்டுமே காண முடியும். “நிறங்கள் ஓர் ஐந்துடையாய்” என திருவாசகத்தில் போற்றுவது இந்த தலத்தை குறிப்பிட்டு தான். பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக இருக்கும் இந்த தலத்தில் பகலில் 6 நாழிகைக்கு ஒரு முறை என 5 முறை சுயம்பு லிங்கம் நிற மாறுகிறது.

காலை 6 முதல் 08.24 வரை – தாமிர நிறம்

காலை 08.25 முதல் 10.48 வரை – இளம் சிவப்பு

காலை 10.49 முதல் பகல் 01.12 வரை – உருக்கிய தங்கம்

பகல் 01.13 முதல் 03.36 வரை – நவரத்தினப் பச்சை

மாலை 03.37 முதல் 6 வரை – என்ன நிறம் என அறிந்து கொள்ள முடியாத நிறம்

மாடக் கோவிலாக அமைந்துள்ள இக்கோவில் தென் கைலாயம் என அழைக்கப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு சிவ பெருமான் திருவடி தீட்சை அளித்த தலம் இதுவாகும். அதை நினைவு கூறும் விதமாக திருநாவுக்கரசரை போலவே பக்தர்கள் அனைவரின் தலை மீது சிவ பெருமானின் திருப்பாதங்கள் பட்டு, ஆசி வழங்க வேண்டும் என்பதற்காக இந்த கோவிலில் ஜடாரி சேவை வழங்கப்படுகிறது. வழக்கமாக பெருமாள் கோவில்களில் மட்டும் வழங்கப்படும் ஜடாரி சேவை வழங்கப்படும் ஒரே சிவன் கோவில் இது மட்டும் தான்.

மகாபாரதத்துடன் இந்த ஆலயத்திற்கு நெருங்கிய தொடர்பு உள்ளதாக தல புராணம் சொல்கிறது. திருமணத்திற்கு முன்பே ஒரு குழந்தையை பெற்றெடுத்து, அந்த குழந்தையை ஒரு கூடையில் வைத்து ஆற்றில் விட்ட பாவம், பாண்டவர்களின் தாயான குந்தி தேவிக்கு இருந்தது. இந்த பாவம் தீர நாரதரிடம் வழி கேட்க, அவரோ மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் ஏழு கடல்களில் நீராடினால் இந்த பாவம் தீரும் என்றார். அது எப்படி முடியும் என திகைத்து நின்ற குந்தி தேவி, நாரதரின் அறிவுரையின் படி இந்த தலத்திற்கு வந்து சிவ பெருமானை வேண்டினார். அவளின் வேண்டுதலை ஏற்ற சிவ பெருமான், ஏழு கடல்களையும் இங்குள்ள குளத்தில் எழுந்தருள செய்தார். அதில் மூழ்கி எழுந்த குந்தி தேவியின் பாவம் நீங்கியது. குந்தி தேவியின் பாவத்தை தீர்க்க ஏழு கடல்கள் ஒன்றான தீர்த்தம் என்பதால் இதற்கு சப்தசாகர தீர்த்தம் என்று பெயர்.

அது மட்டுமல்ல நாயன்மார்களுள் ஒருவரான அமரநீதி நாயனார் வாழ்ந்து, வழிபட்டு, முக்தி பெற்ற திருத்தலம் நல்லூர் தலம் என புராணங்கள் சொல்கின்றன. இந்த கோவில் சோழர்களால் கட்டி, பராமரிக்கப்பட்டதை இங்குள்ள கல்வெட்டுக்கள் தெளிவிக்கின்றன. உத்தம சோழன், ராஜ ராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோர் பற்றிய குறிப்புகள் அடங்கிய கல்வெட்டுகள் இந்த ஆலயத்தில் உள்ளன. இத்தலத்தில் அருள் செய்யும் கல்யாண சுந்தரேஸ்வரரை திருமணமாகாதவர்கள் வந்து, அவர்கள் பெயரில் அர்ச்சனை செய்து வேண்டிக் கொண்டால் 90 நாட்களில் திருமணம் நிச்சயம் ஆகி விடும் என இங்கு வரும் பக்தர்கள் சொல்கிறார்கள். அதே போல் குழந்தை வரம் வேண்டியும், நல்ல முறையில் பிரசவம் நடக்கவும், சுக பிரசவம் நடக்கவும் இங்குள்ள காளி தேவிக்கு வளையல் அணிவித்து பெண்கள் வேண்டிக் கொள்கிறார்கள். நல்லபடியாக குழந்தை பிறந்த பிறகு முதல் மொட்டையை இந்த கோவிலில் காணிக்கையாக செலுத்துகின்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author