சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் விஜய் திவாஸ் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
1971 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த போரில் இந்திய ராணுவம் வெற்றி பெற்றது. அதன் விளைவாக வங்கதேசம் என்ற நாடு உருவாகியது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி விஜய் திவாஸ் தினம் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் சென்னை திருவான்மியூரில் உள்ள கலாக்ஷேத்ராவில் விஜய் திவாஸ் தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, 1971 ஆம் ஆண்டு போரின் போது எடுக்கப்பட்ட ஒருசில காட்சிகள் திரையிடப்பட்டன. மேலும், பாகிஸ்தானுடன் ஏற்பட்ட போரின் போது நடைபெற்ற சம்பவங்களையும், வங்கதேசம் விடுதலை பெற்று புதிய நாடாக உருவானதையும் நாடகமாக அரங்கேற்றினர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய கர்னல் மலையப்பன், போரின் போது ரேடியோ தொடர்பு தான் இருந்ததாகவும், பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்தி, உருது, பெங்காலி ஆகியவற்றை தான் கண்காணித்ததாகவும் கூறினார்.
மேலும், தமிழில் பேசுங்கள், அவர்களால் கண்டுபிடிக்க முடியாது என்று இந்திய ராணுவம் தெரிவித்ததாகவும், அனைத்து தகவல்களும் தமிழிலேயே இருந்ததால் மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து பேட்டியளித்த முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் இந்திரபாலன், 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் வெற்றி என்பது ஒப்பிட முடியாத ஒன்று என்றும், உலக வரலாற்று போரின் முடிவில் ஒரு புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.
போர் நிறுத்தத்திற்காகப் பாகிஸ்தானை கையெழுத்திட வைத்ததாகவும், ஆனால் வங்கதேசத்தின் தற்போதைய நிலை முற்றிலும் மாறி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
