துபாயில் நடந்த பதினெட்டு வயதுக்குட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை தொண்ணூறு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தொடரில் தொடர்ந்து இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிரான போட்டியில் 171 ரன்கள் குவித்து அசத்திய 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, பாகிஸ்தானுக்கு எதிராக வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார்.
எனினும், 241 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஃபர்ஹான் யூசுப், 33 ரன்களுடன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியபோது, அணியின் கேப்டன் ஆயுஷ் மஹாத்ரே வீசிய இருபத்தி நான்காவது ஓவரின் கடைசிப் பந்தில் ஃபர்ஹான் யூசுப்பை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்து, வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்கு ஒரு பெரிய திருப்புமுனையைக் கொடுத்தார்.
பின்னர், முப்பத்தி ஒன்பதாவது ஓவரில், அரை சதம் கடந்து நிலைத்து நின்று விளையாடிய ஹுசைஃபா அஹ்சன் கொடுத்த கேட்ச்சை, பவுண்டரி அருகே ஓடிச் சென்று சூர்யவன்ஷி பாய்ந்து பிடித்து, அபாரமான பீல்டிங்கின் மூலம் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணிக்காக ஏரான் ஜார்ஜ் எண்பத்தி ஐந்து ரன்கள் குவித்து அதிகபட்ச ரன்களை எடுத்தார்.
மேலும், பந்து வீச்சில் கனிஷ்க் சௌஹான் மற்றும் தீபேஷ் தேவேந்திரன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி, பாகிஸ்தான் அணியை நூற்றைம்பது ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.
