ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிரசாந்த் வீரர் மற்றும் கார்த்திக் ஷர்மா ஆகிய இளம் இந்திய வீரர்களை வாங்கியது. அதற்காக சிஎஸ்கே தலா 14.20 கோடிகளை செலவழித்தது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. ஏனெனில் அவர்கள் இருவருமே சர்வதேச மற்றும் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை.
அதே போல அமன் கான், சர்பராஸ் கான், ஜாக் போல்க்ஸ் என இம்முறை சிஎஸ்கே அணி நிறைய இளம் வீரர்களை வாங்கியுள்ளது. 2025 சீசனில் மிகவும் மோசமாக விளையாடிய சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்து வெளியேறியது. எனவே 2026இல் கம்பேக் கொடுத்து வருங்காலத்தை வளமாக கட்டமைப்பதற்கு நோக்கத்துடன் சிஎஸ்கே அணி இளமையான வீரர்களை வாங்கியுள்ளது என்றே சொல்லலாம்.
2026இல் தோனி ஓய்வு:
இந்நிலையில் 44 வயதாகும் தோனி அடுத்த வருடம் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவது 100% உறுதி என்று முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். அதனாலேயே ருதுராஜ் தலைமையில் இளம் அணியை சிஎஸ்கே உருவாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக தோனிக்கு மாற்றாக சஞ்சு சாம்சன், உர்வில் பட்டேல், கார்த்திக் சர்மா ஆகிய 3 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை சென்னை அணி வாங்கியுள்ளது. இது பற்றி உத்தப்பா பேசியது பின்வருமாறு. “இது சுவரில் எழுதப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன்”
“2026 எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் சீசனாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. இனிமேல் இன்னுமொரு வருடம் தோனி விளையாடுவாரா என்ற யூகங்கள் இருக்காது. இந்த வருடத்துடன் அவர் உண்மையாகவே முடித்துக்கொள்ளப் போகிறார். கடந்த வருடத்திலிருந்து சிஎஸ்கே அணி இளைஞர்கள் மீது முதலீடு செய்வதே அதற்கான அறிகுறி என்று நினைக்கிறேன்”
உத்தப்பா கருத்து:
“அவர்கள் திறமையை வெளிக்கொண்டு வந்து முன்னேற்றி அதை தங்களுடைய அணிக்குள் வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்துகிறார்கள். அதே போல ஜடேஜாவை டிரேடிங் முறையில் கொடுத்ததும் நியாயமான முடிவு. எம்எஸ் தோனி வழிகாட்டுதலில் ருதுராஜ் தலைமையில் நீங்கள் இன்னொரு ஜடேஜா போன்ற வீரரை ஏன் உருவாக்கக்கூடாது? அந்த வழியில் செல்வதையே நீங்களும் விரும்புவீர்கள்”
“ஒருவேளை தோனி விளையாடாவிட்டால் சிஎஸ்கே அணியின் ஆலோசகராக இருப்பார் என்பது நமக்குத் தெரியும். இந்த வருடம் அவர் ஆலோசகரைப் போன்ற வீரராக அணியை வழி நடத்துவார். ஏற்கனவே தோனி அந்த கோணத்தில் தம்முடைய வேலையைப் பார்க்க துவங்கியுள்ளார். அதனாலேயே சிஎஸ்கே அணி இளம் வீரர்களை கொண்டு வந்துள்ளது” என்று கூறினார்.
