வடமேற்கு சீனாவிலுள்ள ஷான்சி மாகாணத்தின் சிஆன் மற்றும் யான்ஆன் நகரங்களை இணைக்கும் அதிவேக ரயில் பாதை டிசம்பர் 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை முழுமையாக இயங்க தொடங்கியது.
இந்த ரயில் பாதையின் கட்டுமானப் பணி 2021ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. வடிவமைப்பின்படி, அதிகபட்சமாக மணிக்கு 350 கிலோமீட்டர் என்ற வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும். புதிய ரயில் சேவை செயலுக்கு வருவதுடன், 299 கிலோமீட்டர் தூரப் பயணத்திற்கு சுமார் ஒரு மணிநேரம் மட்டுமே தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணயச்சீட்டுகள் 25ஆம் நாள் முதல் பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, கிழக்கு சீனாவிலுள்ள ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்ஜோமற்றும் கியுஜோ நகரங்களுக்கிடையேயான அதிவேக ரயில் பாதையும் 26ஆம் நாளன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது. சமீபத்தில் பல புதிய ரயில் பாதைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், சீனாவின் அதிவேக ரயில் பாதைகளின் மொத்த நீளம் 50 ஆயிரம் கிலோமீட்டைத் தாண்டியுள்ளது. இது, சீனாவின் அதிவேக ரயில்வே துறை புதிய கட்டத்தில் நுழைவதை குறிக்கிறது.
தற்போது வரை, சீனாவில் 5 லட்சத்துக்கும் மேலான மக்கள் தொகை கொண்ட நகரப்புறங்களில் 97 விழுக்காட்டு பகுதிகள், அதிவேக ரயில்வே வலையமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன. சீனாவில் இயக்கப்பட்டுள்ள உயர்வேக ரயில் பாதைகளின் மொத்த நீளம் உலகின் முதலீடம் வகிக்கிறது.
