தமிழகத்தில் தைத் திருநாளை முன்னிட்டு 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப்பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 8) சென்னையில் தொடங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளில் அந்தந்தப் பகுதி ஊழியர்கள் மூலம் விநியோகம் செய்யப்படவுள்ள நிலையில், கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஏற்கனவே வீடு வீடாகச் சென்று டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்று (ஜன. 8) தேதியிடப்பட்ட டோக்கன்களைக் கொண்டுள்ள அனைத்து அட்டைதாரர்களும் முதலமைச்சர் திட்டத்தைத் தொடங்கி வைத்த உடனேயே தங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென ரூ. 6,936 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், முறைகேடுகளைத் தவிர்க்க ரொக்கப்பணத்தை உறைகளில் (Cover) போட்டு வழங்காமல் வெளிப்படையாக வழங்கவும், விநியோகப் பணிகளின் போது விடுமுறை இன்றி கடைகள் செயல்படவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
