உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வரும் அதிபர் டிரம்ப், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தவும் தயார் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்டிக் கடற்பகுதியில் அமைந்துள்ள கிரீன்லாந்து, தற்போது டென்மார்க் நாட்டின் தன்னாட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளது. இத்தீவின் பாதுகாப்பு முக்கியத்துவம் குறித்துப் பேசிய டிரம்ப், “கிரீன்லாந்தைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் தற்போது ரஷியா மற்றும் சீனப் போர்க்கப்பல்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இது அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு விடப்பட்ட நேரடி சவாலாகும். இந்த நாடுகள் எக்காரணத்தைக் கொண்டும் எமது அண்டை நாடுகளாக மாறுவதை நாங்கள் அனுமதிக்க முடியாது” என்று தெரிவித்தார்.
டென்மார்க் அரசு தனது நிலப்பகுதியை விட்டுக்கொடுக்க மறுத்து வரும் நிலையில், டிரம்ப் தனது நிலைப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில்:”பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான ஒரு ஒப்பந்தத்தை எட்டவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் டென்மார்க் இதற்கு ஒத்துழைக்க மறுத்தால், கிரீன்லாந்தைக் கைப்பற்ற ‘கடினமான வழியை’ அமெரிக்கா தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும். இது வெறும் எச்சரிக்கை அல்ல; நமது நாட்டின் பாதுகாப்பு சார்ந்த அவசியம்.”
500 ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க் படகுகள் அங்கு சென்றதால் மட்டுமே அந்த நிலம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது என்று வாதிட்ட டிரம்ப், அமெரிக்காவின் கப்பல்களும் அப்பகுதிக்குச் சென்று வந்துள்ளன என்பதைச் சுட்டிக்காட்டினார். ரஷியாவோ அல்லது சீனாவோ அங்கு காலூன்றுவதற்கு முன்பாக அமெரிக்கா அதனைக் கைப்பற்ற வேண்டும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.
அதிபர் டிரம்பின் இந்த அதிரடி அறிவிப்புக்கு டென்மார்க் அரசு தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. ஒரு நாட்டின் தன்னாட்சிப் பிராந்தியத்தை மற்றொரு நாடு ராணுவ ரீதியாகக் கைப்பற்றுவோம் என்று மிரட்டுவது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என அரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
