மாலத்தீவு அதிபர் முய்சுவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகின்றன.
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக கடந்த 2-ம் தேதி லட்சத்தீவுக்குச் சென்றிருந்தார். அப்போது, கடற்கரையில் நடைப்பயிற்சி செய்தவர், பின்னர், அழ்கடலில் ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார். டெல்லிக்குத் திரும்பிய பிரதமர் மோடி, லட்சத்தீவின் அழகு பற்றியும், தனது பயண அனுபவம் குறித்தும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்தியர்கள் அனைவரும் ஒருமுறையாவது லட்சத்தீவு பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தவர். லட்சத்தீவு பயணம் குறித்த பல்வேறு புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.
பிரதமர் மோடியின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது. ஆனால் பிரதமரின் பதிவை விமர்சனம் செய்து மாலத்தீவை சேர்ந்த 3 அமைச்சர்கள் கருத்து பதிவிட்டனர். இதற்கு திரை பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் என பலரும் மாலத்தீவுக்கு எதிராகவும், லட்சத்தீவுக்கு ஆதரவாகவும் பதிவுகளை வெளியிட்டனர்.
மேலும் மாலத்தீவு அதிபரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அந்நாட்டு சிறுபான்மையின பிரிவுத் தலைவர் அலி அஜிம் தெரிவித்தார். இதனையடுத்து மாலத்தீவு சீனாவுடன் நெருக்கம் காட்டியது.
இந்நிலையில், மாலத்தீவு நாடாளுமன்ற சிறப்புக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது அதிபர் முய்சு அமைச்சரவையில் மேலும் 4 பேரை சேர்க்க ஒப்புதல் பெற திட்டமிடப்பட்டிருந்தது. அவர்கள் சீன ஆதரவு எம்பிக்கள் என கூறப்படுகிறது. ஆனால் இந்த கூட்டத்தில் மோதல் வெடித்து கைகலப்பாக மாறியது. காயம் அடைந்த ஒருவர் உறுப்பினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனால் வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
இதனைத்தொடர்ந்து முய்சுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முயற்சி எடுத்து வருகின்றன. இதற்கு தேவையான கையொப்பங்களை உறுப்பினர்களிடம் பிரதான எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயக கட்சி சேகரித்து விட்டதாக கூறப்படுகிறது.