பராமரிப்புப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு காரணமாக, தமிழகப் பதிவுத்துறையின் இணையதளம் இன்று இரவு முதல் நாளை காலை வரை செயல்படாது எனப் பதிவுத்துறைத் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமானது பராமரிப்புப் பணிகள் மற்றும் ‘ஸ்டார் 3.0’ திட்டத்தின் கீழ் தரமேம்பாடு செய்யும் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக, இன்று (புதன்கிழமை) இரவு 7 மணி முதல் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணி வரை இணையதளச் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
இணையதளம் செயல்படாத நிலையிலும், தமிழகத்தில் உள்ள அனைத்துச் சார்பதிவாளர் அலுவலகங்களிலும் ஆவணப் பதிவுப் பணிகள் நாளை வழக்கம் போல் நடைபெறும். இதில் எந்தவித மாற்றமும் இல்லை.
நாளை (ஜனவரி 22) பத்திரம் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள், இணையதளம் முடங்குவதைக் கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட பணிகளை இன்று இரவு 7 மணிக்குள் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்: ஆன்லைன் மூலம் டோக்கன் பெறுதல். பதிவுக் கட்டணங்களை இணைய வழியில் செலுத்துதல். வில்லங்கச் சான்று (EC) மற்றும் சான்றிட்ட நகல்களைப் பதிவிறக்கம் செய்தல். மேலும் இணையதளச் சேவைகளைத் தங்களது வசதிக்கு ஏற்ப முன்கூட்டியே பயன்படுத்தி, கடைசி நேரத் தவிப்புகளைத் தவிர்க்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
