ரயில்வே தண்டவாளப் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் காரணமாகத் தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் ரயில்களின் சேவையில் அதிரடி மாற்றங்களை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. குறிப்பாக திருச்சி மற்றும் மதுரை கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறும் பணிகள் காரணமாக, வரும் 27-ஆம் தேதி கரூர்-திருச்சி, திருச்சி-ஈரோடு மற்றும் சேலம்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல பாசஞ்சர் ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல், திருச்சி-காரைக்கால் டெமு ரயில் குறிப்பிட்ட தேதிகளில் தஞ்சாவூர் வரை மட்டுமே இயக்கப்படும். மதுரை கோட்டப் பணிகள் காரணமாக செங்கோட்டை-மயிலாடுதுறை, கன்னியாகுமரி-ஹவுரா மற்றும் குருவாயூர்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் போன்ற முக்கிய ரயில்கள் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்பட உள்ளன.
இந்த திடீர் மாற்றங்களால் பயணிகள் குழப்பமடையாமல் இருக்க, பயணத்திற்குத் தயாராகும் முன் ரயில்வே கால அட்டவணையைச் சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
