உலகம் முழுவதும் நிச்சயமற்ற சுழலில் சிக்கித் தவித்தாலும், இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற பத்திரிக்கையாளர் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார். இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதுதான் ‘தேசத்தின் நோக்கம் என்றார்.
நான் தலைப்புச் செய்திகளை வழங்குவதற்கு வேலை செய்வதில்லை என்றும், ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (deadlines) பணியை முடிக்க வேண்டும் என்பதற்காக பணியாற்றி வருவதாகவும் கூறினார். 2014 க்கு முந்தைய காலகட்டத்தில், நாட்டில் சில நூறு பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்கள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று அந்த எண்ணிக்கை சுமார் 1.25 லட்சமாக உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.
90 சதவீத பரப்பளவைக் கொண்ட 600க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த ஸ்டார்ட் அப்கள் பரவியிருப்பதே இந்தியாவின் ஸ்டார்ட்அப் புரட்சியின் உண்மையான அடையாளம் என்று அவர் தெரிவித்தார்.
டயர்-2 மற்றும் டயர்-3 நகர இளைஞர்கள் ஸ்டார்ட்அப் புரட்சியை முன்னெடுத்து வருவதாகவும், சிறிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களின் மாபெரும் வெற்றி பாரதத்தின் ஸ்டார்ட்அப் புரட்சிக்கு உந்துதலாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சைக்கிள் கூட ஓட்டாத கிராமத்துப் பெண்கள் தற்போது ட்ரோன் பைலட்டுகளாக மாறி வருவதாக மோடி சுட்டிக்காட்டினார். இது சமூகத்தின் வளர்ச்சியில் பல மடங்கு விளைவை ஏற்படுத்தும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.