தேசிய நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டண நடைமுறையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தேசிய நெடுஞ்சாலைக் கட்டண விதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் திருத்தங்கள் பிப்ரவரி 15 முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
புதிய விதிமுறைகளின்படி ஒரு தேசிய விரைவுச் சாலை முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் வரை அதில் பயன்பாட்டில் உள்ள தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணமும் சாதாரண தேசிய நெடுஞ்சாலைகளுக்கு இணையான குறைந்த விகிதத்திலேயே நிர்ணயிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
பொதுவாக விரைவுச் சாலைகள் அதிவேகப் பயணத்தை உறுதி செய்வதால் சாதாரண நெடுஞ்சாலைகளை விட 25 சதவீதம் கூடுதல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம். ஆனால் இனி விரைவுச் சாலை முழுமையாகத் திறக்கப்படாத நிலையில் செயல்பாட்டில் உள்ள பகுதிக்கு இந்தக் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட மாட்டாது.
இந்த மாற்றத்தின் மூலம் பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் நிலவும் வாகன நெரிசலைக் குறைக்கவும் சரக்கு போக்குவரத்தை விரைவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் வாயிலாக வாகனங்கள் நெரிசலில் சிக்கி ஏற்படுகின்ற காற்று மாசுபாட்டையும் கட்டுப்படுத்த முடியும் என்று அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
