டி20 உலகக் கோப்பை சூப்பர்-8 சுற்றில் தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்த பெரும் தோல்வியும், ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மேற்கிந்தியத் தீவுகள் பெற்ற இமாலய வெற்றியும், இந்திய அணியின் அரையிறுதிப் பயணத்தைச் சிக்கலாக்கியுள்ளது. தற்போது இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டுமானால், மற்ற அணிகளின் வெற்றி தோல்விகளைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
தற்போது சூப்பர்-8 பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் தலா ஒரு வெற்றியுடன் முன்னிலையில் உள்ளன. ரன் ரேட் அடிப்படையில் மேற்கிந்தியத் தீவுகள் (+5.35) மற்றும் தென்னாப்பிரிக்கா (+3.80) வலுவாக உள்ளன. ஆனால், இந்திய அணியின் ரன் ரேட் (-3.80) மிகவும் பின்தங்கியுள்ளது.
இதனால் இந்திய அறையறதுக்கு முன்னேற இன்று மதியம் நடைபெறும் போட்டியில் தென்னாப்பிரிக்கா மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்த வேண்டும். அதேசமயம், இன்று மாலை சென்னையில் நடைபெறும் போட்டியில் இந்தியா ஜிம்பாப்வேயை வீழ்த்த வேண்டும்.
மார்ச் 1-ஆம் தேதி நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்த வேண்டும். இப்படி நடந்தால் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
அதே நேரத்தில் இன்று மதியம் மேற்கிந்தியத் தீவுகள் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தினால், மார்ச் 1-ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வே அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும் (இது கடினமான ஒன்று). அதன் பிறகு இந்தியா தனது மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் (ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்தியத் தீவுகள்) வெற்றி பெற வேண்டும்.
இந்தச் சூழலில் தென்னாப்பிரிக்கா வெளியேறும், இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிக்குச் செல்லும். இன்று மதியம் 3 மணிக்கு அகமதாபாத்தில் தென்னாப்பிரிக்கா – மேற்கிந்தியத் தீவுகள் மோதும் ஆட்டமே இந்தியாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும். அதில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவின் அரையிறுதி நம்பிக்கை நீடிக்கும்.
ஒருவேளை மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றுவிட்டால், இந்தியா ஜிம்பாப்வேயை வென்றாலும் அரையிறுதி வாய்ப்பு மிகக் கடினமாகிவிடும். சென்னையில் இன்று மாலை 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் ஜிம்பாப்வேயையும், மார்ச் 1-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளையும் வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
